மட்டக்களப்பு தலைமையாக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு நகரில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற முறையில் உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்த பிரபல உணவகம் ஒன்றை இரு தினங்களுக்கு மூடி சீல் வைத்து மூடுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சுதர்சனி உத்தரவிட்டுள்ளார்
மட்டக்களப்பு நகரிலுள்ள குறித்த உணவு விற்பனை நிலையத்தின் மீது பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த உணவகத்தைச் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியபோது மனிதபாவனைக்கு உதவாத பெருமளவிலான உணவுப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மனித நுகர்விற்கு பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்தல், மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்தல் உட்பட ஐந்து குற்றச்சாட்டுகளின் மீது குறித்த உணவகம் மீது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள் வழக்கு தாக்கல் மேற்கொண்ட போது குறித்த ஹோட்டல் உரிமையாளருக்கு 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன் இருதினங்களுக்கு உணவகத்தை சீல் வைத்து மூடுமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ சுதர்ஷினி உத்தரவிட்டார்
நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த உணவகம் பொது சுகாதார பரிசோதகர்களினால் நேற்று மாலை (8)சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
இரு தினங்களின் பின்னர் உணவக உரிமையாளர் உணவகத்தினைத் தூய்மைப்படுத்தி மனித நுகர்விற்கு பொருத்தமான முறையில் உணவு தயாரிக்கும் இடமாக மாற்றி அமைத்தால் மீண்டும் திறப்பதற்கான அனுமதியை பொதுச் சுகாதார பரிசோதவர்கள் வழங்குவார்கள் என கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் மேலும் தெரிவித்தார்.
குறித்த உணவக உரிமையாளர் மீதான வழக்கு எதிர் வரும் 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Leave a comment