போர் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்த தடயவியல் நிபுணர்கள் உட்பட ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணிமனை மூலம் தொழில்நுட்ப உதவியைப் பெற இலங்கை தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் அகழப்படும் மனிதப் புதைகுழிகளில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண உதவுவதும் இத்தகைய ஒத்துழைப்பில் அடங்கும் என்று வெளி விவகார அமைச்சர் விஜித ஹேரத் கூறியுள்ளார்.
மனித புதைகுழிகளை அகழும் செயல்பாட்டுடன் தொடர்புடைய நீதித்துறை அதிகாரிகளின் உத்தரவுகளைப் பொறுத்து இந்த உதவியைப் பெறும் செயல்பாடு அமையும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான புதிய தீர்மானம் மீதான வாக்கெடுப்புக்குத் திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால், வரைவுத் தீர்மானத்தில் திருத்தங்கள் எதிர்வரும் 25 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
வரைவுத் தீர்மானத்தில் பெரிய திருத்தங்கள் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை. எனினும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கை மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பில் இருக்கும் என்றும் அமைச்சர் ஹேரத் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு
அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், இலங்கையின் பொறுப்புக்கூறல் காலமும் இரண்டு வருடங்களால் நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, இலங்கை மீதான மனித உரிமைகள் பேரவையின் அதிகாரத்தை நீடிக்கும் வரைவுத் தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையிடமும் அதன் முக்கிய ஆதரவாளர்களான இங்கிலாந்து, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகள் கடந்தவாரம் ஒப்படைத்தன. இலங்கையில் பல புதைகுழி தளங்களை அடையாளம் காணப்படுவது போதுமான வளங்களுடன் தொடர்ச்சியான பணிகள் வழங்கப்பட வேண்டியதன் அவசியம், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பணிமனையின் சுயாதீனமான மற்றும் பயனுள்ள செயல்பாட்டின் முக்கியத் துவம் என்பவற்றை இந்தத் தீர்மானம் வலியுறுத்துகிறது.
இதனிடையே, பயங்கரவாதத்தடைச் சட்டம் இந்த ஆண்டுக்குள் இரத்து செய்யப்படும். அதற்கு பதிலாகப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் இந்த ஆண்டுக்குள் பாராளு மன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
Leave a comment