நீதிமன்ற உத்தரவில்லாமல் எமது அரசாங்கம் யாரையும் கைது செய்ததில்லை. பாதாளக் குழுக்களை போஷித்து அதன் மூலம் நாட்டுக்குள் போதைப்பொருள் கொண்டுவந்து விநியோகிப்பவர்கள் மொட்டு கட்சியில் இருப்பவர்கள் என்பது நாட்டு மக்களுக்கு
தெரியும். அதனால் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டை எமது அரசாங்கத்தின் மீது சுமத்தி தப்பிக்க முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை உரையாற்றியபோதே மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், நீதிமன்ற உத்தரவின்றி பொலிஸார், இராணுவத்தினர் என யாரையும் எமது அரசாங்கம் கைது செய்ததில்லை.
அதனால் இராணுவத்தினரை கைது செய்திருப்பதாக நாமல் எம்.பி. தெரிவித்த விடயத்தில் எந்த உண்மையும் இல்லை.
முன்னாள் கடற்படைத் தளபதி, அவர் புலனாய்வு பிரிவில் இருக்கும்போது செய்த ஒரு நடவடிக்கை காரணமாக, நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டார்.
இதேபோன்று கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் வரும் முறைப்பாடுகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
போதைப்பொருளுடன் எமது அரசாங்கத்தை தொடர்புபடுத்த நாமல் முயற்சித்தார்.
ஆனால் போதைப்பொருளுடன் பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் மனம்பேரி தொடர்புபட்டவர் என யாரும் அறிந்த விடயம்.
அவர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அவர் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் இணைப்புச் செயலாளர்.
அதனால் போதைப்பொருளுடன் தொடர்புபட்ட பலர் மொட்டு கட்சியில் இருக்கின்றனர் என்றார்.
Leave a comment