போதைப்பொருள் கொள்கலன்கள் தொடர்பான உண்மைகளை மூடிமறைப்பதற்கு, பொதுஜன பெரமுன உள்ளிட்ட தரப்புகள் மீது அரசாங்கம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாம் திட்டமிட்ட குற்றச்செயற்பாடுகளை ஒழிக்குமாறு கூறுகிறோம். எனினும், அரசாங்கம் இந்த விடயத்தில் அரசியல் லாபம் பெறமுயல்கிறது.
ஒட்டுமொத்த குற்றக்குழுக்களையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வழிநடத்துகிறது என்ற பிரசாரத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
ஆட்சியிலுள்ள இந்த அரசாங்கமே இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனினும், தற்போது துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
தற்போது, கொள்கலன்கள் பற்றி பேசப்படுகிறது, அந்த கொள்கலன்களை ஏதேனும் பறவைகள் தூக்கிச் சென்று மித்தெனியவில் வைத்திருக்க வாய்ப்பில்லை.
இந்த கொள்கலன் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன, அவை துறைமுகத்தில் நிச்சயமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும்.
இந்த போதைப்பொருள் கொள்கலன்கள் தொடர்பில் இரண்டு தடவைகள் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளால் பாதுகாப்பு பிரிவினருக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த புலனாய்வு அமைப்புகளில் இந்திய முகவரகமொன்றும் இருப்பதாகவும், முன்னதாக பல வெற்றிகரமான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தகவல்களை மேற்கோள் காட்டி அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறான தகவல்கள் கடந்த வருடத்தின் இறுதியில் அல்லது இந்த வருடத்தின் ஆரம்பத்தில் வழங்கப்பட்டுள்ளன. இந்த தகவல் கிடைத்த போது, அந்த கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டிருக்கவில்லை என்றும், பின்னர் சுங்கத்தின் வசமிருந்த அவற்றை காவல்துறையினர் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளதாக அந்த அரச ஊடகத்தின் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
சோதனையின் பின்னரும் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ள இதனூடாக தெளிவாகின்ற நிலையில், பொதுஜன பெரமுன மீது அரசாங்கம் குற்றம்சுமத்துகிறது.
சுங்கத்தையும் காவல்துறையையும், குற்றக்குழுக்களையும் ராஜபக்ஷக்களே கட்டுப்படுத்துவதாக கூறப்படுகின்ற நிலையில், அரசாங்கம் என்ன செய்கிறது என்ற கேள்விகள் எழுகின்றன.
துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பான பொறுப்புகளை சுங்கம் ஏற்பதாக கூறியது. அந்த கொள்கலன்கள் சென்ற இடத்தை அறிந்துள்ளதாக அமைச்சரும் கூறினார்.
திட்டமிட்ட வகையில் இந்த விடயத்தை அரசாங்கம் மூடிமறைக்க முயற்சிக்கிறது, குற்றச்சாட்டை ராஜபக்ஷக்கள் மீது திருப்பிவிடுகிறது.
அரசாங்கத்தின் அமைச்சர்கள் தெரிந்தே இந்த கொள்கலன்களை விடுவித்து, பிரச்சினைகள் வரும்போது அரச அதிகாரிகளை பலிகடாவாக்க முயற்சிக்கின்றனர்.
பட்டியலில் இல்லாத ஒருவர் ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டார், இறுதியில் சிறைச்சாலை அத்தியட்சகருக்கே சிறைக்கு செல்ல நேரிட்டது. நீதி அமைச்சின் செயலாளர் குறித்து எந்த விசாரணையும் இல்லை.
அரசாங்கம் இந்த விடயத்தில் அரசியல் செய்யாமல் பக்கசார்பின்றி விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Leave a comment