யாழ். புதிய செம்மணி வீதிச் சந்தியில் இருந்து கொக்குவில் சந்தி வரையான ஆடியபாதம் வீதியூடாக டிப்பர் வாகனங்கள் காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை பயணிப்பதற்கு முற்றாகத் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஏனைய பாரவூர்திகள் காலை 7 மணி தொடக்கம் 9 மணி வரை மற்றும் நண்பகல் 12 மணி தொடக்கம் பிற்பகல் 2.30 மணி வரை அந்த வீதியூடாகப் பயணிப்பதற்குத் தடை விதித்து பொதுப்போக்குவரத்தை இலகுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்பள்ளி சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள், உத்தியோகத்தர்கள் பணிக்குச் செல்லும் நேரங்கள் மற்றும் அண்மையில் ஏற்பட்ட வீதி விபத்துக்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பொதுப்போக்குவரத்தை இலகுபடுத்தும் நோக்குடன் இந்த விடயங்கள் குறித்து நல்லூர் பிரதேச சபையால் தீர்மானிக்கப்பட்டு, இந்தப் போக்குவரத்துத் தடை நடைமுறைக்கு வந்துள்ளது.
இது தொடர்பான அறிவித்தல் பலகைகள் வீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, வாகன சாரதிகள் இந்த விதிமுறைகளைப் பின்பற்றுமாறு நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a comment