“அரசமைப்பின் 17ஆவது திருத்தத்தின் ஊடாக பொலிஸ் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டு சுயாதீனமாக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று முழுமையான அரசியல் தலையீட்டினால் பொலிஸ் ஆணைக்குழு அதன் சுயாதீனத்தன்மையை இழந்துள்ளது. ஜே.வி.பி. செயற்பாட்டாளரான பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் தீர்மானத்துக்கமையவே பொலிஸ்மா அதிபர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர விசனம் வெளியிட்டார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசமைப்பின் 17ஆவது திருத்தத்தின் ஊடாக பொலிஸ் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டு சுயாதீனமாக்கப்பட்டுள்ளது. அதற்கமைய வெவ்வேறு காரணிகள் தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. இடமாற்றம், நியமனங்கள் உள்ளிட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால், தற்போது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் நியமனங்களில் அரசியல் தலையீடுகள் காணப்படுகின்றன.
அரசமைப்பின் ஊடாக தமக்காக உறுதிப்படுத்தப்பட்ட சுயாதீனத்தன்மையை பொலிஸ் ஆணைக்குழு கைவிட்டுள்ளது. அரசின் அழுத்தத்தின் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் எதற்காக இவற்றை அனுமதிக்கின்றார்? தற்போது சகல அதிகாரங்களும் பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டு 17ஆவது திருத்தத்துக்கு முன்னர் காணப்பட்டதைப் போன்று பொலிஸ் ஆணைக்குழு முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் தேவைக்கேற்பவே பொலிஸ்மா அதிபர் செயற்படுகின்றார். தற்போது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் நாளுக்கு நாள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.
பொறுத்தமற்றவர்கள் பதவிகளில் நியமிக்கப்படுகின்றனர். விரைவில் இது தொடர்பில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நாம் நடவடிக்கை எடுப்போம். சேவையில் இருந்த போது காயமடைந்த சுமார் 400 பொலிஸ் உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் இருக்கின்றனர்.
அவர்களுக்கு இலகுவாகப் பொறுப்புக்களை மாத்திரமே நிறைவேற்ற முடியும். ஆனால், அவர்களுக்கு மிகவும் கடினமாக பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. நீண்ட நேரம் நிற்க முடியாதவர்கள் போக்குவரத்து பிரிவில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
எனவே, இவர்கள் தொடர்பில் மனிதாபிமானத்துடன் சிந்தித்துச் செயற்படுமாறு பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார்.
Leave a comment