வசந்த கரன்னாகொட, சவேந்திர சில்வா, கமல் குணரத்ன போன்ற இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக உலகளாவிய ரீதியில் போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதோடு, அவர்களுக்கெதிராக தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் யுத்தத்திற்குத் தலைமை தாங்கிப் பிரபாகரனைக் கொன்ற அப்போதைய இராணுவத்தளபதியான சரத் பொன்சேக்காவுக்கு ஏன் சர்வதேசம் தடை விதிக்கவில்லை? என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே கேள்வியெழுப்பினார்.
கொழும்பிலுள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (7) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சரத் பொன்சேகா மிகுந்த ஆவேசத்துடனும் வெறுப்புடனும் சில விடயங்களைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் என் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். சரத் பொன்சேகாவுக்குப் பாடம் புகட்ட விரும்பும் இரண்டு விலங்குகளைப் பற்றி அவர் அறிந்துகொள்ள வேண்டும்: ஒரு விலங்கு சிங்கம், மற்றொன்று தேவாங்கு. சிங்கத்திற்கும் தேவாங்கிற்குமிடையில் உள்ள மிகப் பெரிய வித்தியாசத்தை சரத் பொன்சேகா உணர வேண்டும்.
சிங்கம் வயதானாலும் சரி, நோய்வாய்ப்பட்டாலும் சரி, அது ஒருபோதும் புல்லைத் தின்னாது. ஆனால் தேவாங்கு பொதுவாக இறைச்சி உண்ணும் விலங்காக அறியப்பட்டாலும், சில தேவாங்குகள் மரப்பட்டைகளைத் தின்னும். அது மாத்திரமின்றிஅ வை நாயாகிப் போகும் சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆனால் சிங்கம் ஒருபோதும் நாயாகிப் போவதில்லை என்ற உண்மையைத் சரத் பொன்சேகாவுக்கு நான் கூற விரும்புகிறேன்.
அவர் அடைந்திருக்கும் நிலையைப் பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. கடந்த தேர்தலில் அவர் எந்தளவுக்கு புறக்கணிக்கப்பட்டிருந்தார்? தன்னைப் பொதுமக்களிடையே ஒரு வீரனாகக் காட்ட முயற்சிக்கும் அவர், மகிந்த ராஜபக்ஷவை ஒரு துரோகியாகக் காட்ட முயல்கிறார். ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், தான் சுடப்பட்ட வாகனத்தை அவர் கூட்டங்கள் நடக்கும் இடமெல்லாம் கொண்டு சென்று பிரசாரம் செய்தார். ஆனால், அந்த ‘வீரரின்’ கூட்டத்தில் பங்கேற்க ஒரே ஒரு தனிநபர் மட்டுமே வந்து அமர்ந்திருந்தார், அவரிடம்தான் அவர் பேசிக்கொண்டிருந்தார். சமூகத்திலும் மக்கள் மத்தியிலும் தனக்குள்ள இடத்தை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.
மகிந்த ராஜபக்ஷ தமது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறிய பின்னரும், மக்கள் இப்போது தொடர்ச்சியாக அவரைப் பார்க்கச் செல்கிறார்கள். ஏன்? சிங்கம் வயதானாலும் புல்லைத் தின்னாது, சிங்கம் சிங்கம்தான் என்ற உண்மையை சரத் பொன்சேகா நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அவருடைய அந்த உரையில் மகிந்த ராஜபக்ஷவை இரு கால்களிலும் கட்டித் தொங்கவிட வேண்டும் என்று கூறியிருந்தார். யுத்தம் முடிந்து குறுகிய காலத்துக்குள் நாட்டிலுள்ள முழு இராணுவத்தையும் காட்டிக் கொடுத்த சரத் பொன்சேக்காதான் இன்று இவ்வாறானதொரு கருத்தைக் கூறுகின்றார். முழு இராணுவமும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாகக் காட்டிக் கொடுத்தவர் அவர்தான். இன்றும் நாட்டுக்கு மனித உரிமைகள் குறித்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதற்குச் சரத் பொன்சேகாவின் அந்தக் கூற்றுதான் காரணம்;. சரத் பொன்சேகா அவ்வளவு துரோகத்தனமான ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
யுத்தத்தை முடிப்பதற்கு முன் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது என்று கூறி மகிந்த ராஜபக்ஷவை அவர் இப்போது வெறுப்புடன் திட்டுகிறார். அவர் வெளியிடும் பொய்க் கூற்றுகளைத் தவிர, யுத்தம் இவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வரும் என்று அவருக்குத் தெரிந்திருந்தால், வெள்ளமுள்ளிவாய்க்கால் மோதல் நடந்துகொண்டிருந்தபோது அவர் எதற்காக சீனாவுக்குச் சென்றார்? யுத்தம் இவ்வளவு சீக்கிரம் முடிவடையும் என்று அவர் நினைக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் அவர் இலங்கையில்தான் இருந்திருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, சரத் பொன்சேகாவைத் தவிர, இன்று வசந்த கரன்னாகொட, சவேந்திர சில்வா, கமல் குணரத்ன போன்ற இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக உலகளாவிய ரீதியில் போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. யுத்தத்திற்குத் தலைமை தாங்கிப் பிரபாகரனைக் கொன்றது அவர் தான். அப்படியென்றால் ஏன் அவர் மீது போர்க் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை.
இன்றுவரை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரும் குற்றச்சாட்டுகளில் முக்கியமான போர்க்குற்றச்சாட்டாக வெள்ளைக் கொடி விவகாரமே உள்ளது. அதாவது இறுதி கட்ட போரின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்தவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாக சரத் பொன்சேக்கா தெரிவித்த கருத்து நாட்டையும் இராணுவத்தையும் காட்டிக் கொடுத்த செயலாகவே அமைந்தது.
நாங்கள் போர்க்குற்றங்கள் செய்தோம் என்று இந்த நாட்டின் முழு இராணுவத்தையும் காட்டிக் கொடுத்ததால் தான், சரத் பொன்சேகாவுக்கு எந்தவொரு ஐரோப்பிய நாட்டிலும் போர்க் குற்றச்சாட்டுகள் இல்லை. மகிந்த ராஜபக்ஷவை இரு கால்களிலும் தொங்கவிட வேண்டும் என்று கூறிய இந்த மனிதனை எங்கே தொங்கவிட வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும். நாங்கள் அதைச் சொல்லவில்லை. நாங்கள் அவ்வளவு குறுகிய எண்ணம் கொண்டவர்கள் இல்லை. யுத்தத்திற்கு அவர் ஏதோவொரு பங்களிப்பைச் செய்தார் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
யுத்த வெற்றியின் முடிவில் அலரி மாளிகையில் கேக் வெட்டியபோது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது சகோதரரான கோட்டாபய ராஜபக்ஷவிடம் கேக்கை வெட்ட கொடுக்கவில்லை, சரத் பொன்சேகாவிடம்தான் கொடுத்தார். மகிந்த ராஜபக்ஷ அவ்வளவு நன்றியுணர்வுள்ள, கனிவான தலைவராவார். அடுத்தவர்களின் சாதனைகளைத் தனக்குச் சாதகமாக வரவு வைத்துக் கொள்ளாத தலைவர்.
ஒரு வீரன் துரோகியாக மாற அதிக நேரம் எடுக்காது என்பதற்கு வரலாற்றில் ஏராளமான சான்றுகள் உள்ளன. ‘பாலில் இட்டாலும் கரி வெள்ளையாகும் காலம் இல்லை, எவ்வளவு நன்மைகள் செய்தாலும் துரோகிகள் நல்லவர்களாக மாட்டார்கள்’ என்று ஒரு கவிதையிருக்கிறது. சரத் பொன்சேகாவும் அப்படியான ஒருவர்தான். தன் உயிரைக் காப்பாற்றிய, தன்னைப் பற்றி நாடே பேசும் தளபதி என்று சொல்லும் வாய்ப்பை வழங்கிய தலைவர்களை வெறுப்புடன் பேசும் இவரைப் பற்றி வேறு என்ன பேச முடியும்? என்றார்.
Leave a comment