யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகப் பயணித்த இளைஞர்கள் இருவர் மின்கம்பத்துடன் மோதுண்டு உயிரிழந்துள்ளனர்.
வீதியில் மாடு குறுக்கிட்டதால் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் புன்னாலைக்கட்டுவன் – சுன்னாகம் வீதியில் சுன்னாகம் பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதில், சுன்னாகம், கந்தரோடையைச் சேர்ந்த 17, 18 வயது இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்களில் ஓர் இளைஞர் இரு நாள்களுக்கு முன்னரே புதிய மோட்டார் சைக்கிளை வாங்கியிருந்தார். இந்தநிலையில், இருவரும் நேற்று புன்னாலைக்கட்டுவனுக்குச் சென்று விட்டு மீண்டும் சுன்னாகம் நோக்கித் திரும்பியுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் இருவரும் அதிவேகமாகப் பயணித்த நிலையில் வீதியில் மாடு குறுக்கிட்டுள்ளது. வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் மாட்டை விலத்தி அவர்கள் பயணிக்க முயன்ற நிலையில் வீதிக் கரையில் இருந்த மின்கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
விபத்துக் குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment