புதிய கல்வி ஊழியர்களை, உள்வாங்குவதற்கு அனைத்து பல்கலைக்கழகங்களும் விடுத்த கோரிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நலக்க கலுவேவ தெரிவித்துள்ளதாவது,
அண்மைய மாதங்களில் ஆட்சேர்ப்பு செயன்முறையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது. கல்வி மற்றும் கல்விசாரா பணியாளர்கள் தேவைகளுக்காக ஒவ்வொரு பல்கலைக்கழகமும் சமர்ப்பித்த கோரிக்கைகளுக்கு அமைவாக தற்போது அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகத்தின் கீழ் செயற்படுமொரு குழுவால் பல்கலைக்கழகங்களுக்கு தேவையான ஆட்சேர்ப்பு கோரிக்கைகள் ஆராயப்பட்டே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக பல்கலைக்கழகங்கள் தொடர்புடைய ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மேற்கொள்ளப்படவுள்ளது. அதற்கான நடைமுறைகள் நிறைவடைவதற்கு சிறிது அவகாசம் தேவையாக உள்ளது.
பல ஆண்டுகளாக ஆட்சேர்ப்பு நிறுத்தப்பட்டிருக்கும் போது பல்கலைக்கழகங்களில் பற்றாக்குறை ஏற்படுவது இயல்பானது, ஆனால் அவற்றைத்தீர்க்கும் செயன்முறை இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனினும் பதவி வெற்றிடங்களை ஒரே இரவில் பூர்த்தி செய்வது சாத்தியமற்றது என்றார்.
நாட்டில் பொருளாதார நெருக்கடி உச்சத்தில் இருந்தபோது, செலவினங்களைக் குறைப்பதற்காக பல அரச துறைகளில் பணிக்கமர்த்தல் நிறுத்தப்பட்டமையால் ஆட்சேர்ப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை.
இதனால் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்கள், நிர்வாக ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளின் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment