“நேபாளத்தில் நீண்ட காலமாகக் காணப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. தெற்காசிய பாரம்பரியத்தின்படி, கடுமையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல், அனைவரும் அன்றாட அரசியலில் கவனம் செலுத்தியமையே இளைஞர்களிடையே பெரும் விரக்தியை ஏற்படுத்தியிருக்கின்றது. பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கத்துக்குத் திறமையின்மையே நேபாளத்தின் அழிவுக்குக் காரணமாகியுள்ளது.”
– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை அவர் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“நேபாளம் – காத்மண்டுவில் நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்து பல ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. முதலில் நேபாளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இளைஞர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட அனைத்து வகையான கொலைகளையும் நான் கண்டிக்கின்றேன்.
அதேபோல், முன்னாள் பிரதமரின் வீடு எரிக்கப்பட்டதும், முன்னாள் பிரதமரின் மனைவி கொல்லப்பட்டதும் மிகவும் சோகமான சூழ்நிலையாகும். அந்தப் படுகொலைக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். மேலும், அமைச்சர்கள், குறிப்பாக வெளிவிவகார அமைச்சர் மீதான தாக்குதல்கள், நேர்ந்த துயரத்தின் மேலும் ஒரு நீட்சியாகும். பெண்களின் உரிமைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளன. இத்தகைய செயல்கள் நேபாளத்தின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
காத்மண்டுவில் நிலைமை இவ்வளவு தூரம் சென்றிருக்கக்கூடாது. பொலிஸாரின் துப்பாக்கிச்சூடு ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயலாகும். முதல் நாளிலேயே துப்பாக்கிச்சூடு நடத்தாமல் ஏற்பட்ட சூழ்நிலையை கட்டுப்படுத்தியிருக்க முடியும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய சம்பவங்களுக்கான சாத்தியமும் ஓர் ஆபத்தான சூழ்நிலையாகும். கூகுள், பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற அமெரிக்காவுக்குச் சொந்தமான சமூக ஊடக நிறுவனங்கள் உலகெங்கிலும் உள்ள நாடுகளில் அரசாங்கங்களைக் கவிழ்ப்பதற்கு அளித்துள்ள வாய்ப்பைக் குறைத்து மதிப்பிட முடியாது.
நேபாளம் நீண்ட காலமாகப் பல பிரச்சினைகளைக் கொண்டிருந்தது. அரசாங்கம் அவை தொடர்பில் கவனம் செலுத்தவில்லை. தெற்காசிய பாரம்பரியத்தின்படி, கடுமையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல், அனைவரும் அன்றாட அரசியலில் கவனம் செலுத்தினர். இது இளைஞர்களிடையே பெரும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், சமூக ஊடகங்களை முழுமையாகத் தடை செய்ததால் நெருக்கடி மேலும் வெடித்தது.
நாடாளுமன்றம் மற்றும் நீதிமன்றக் கட்டடங்கள் நாட்டின் ஜனநாயக நிறுவனங்களாகக் கருதப்படுகின்றன. மேலும் அவை அவற்றினுள் இருப்பவர்களால் வரையறுக்கப்படுவதில்லை. நாடாளுமன்றத்தையும் நீதிமன்றத்தையும் எரிப்பது நேபாளத்தின் ஜனநாயகத்துக்கு ஒரு பெரிய அவமானமாகும். எவ்வாறாயினும் இறுதியில் அரசலமைப்பு இல்லாத ஒரு நேபாளமே எஞ்சியுள்ளது. அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத்தின் பொறுப்பு, நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதும், அரசமைப்பின் படி தேர்தலை நடத்துவதும் ஆகும்.
புத்தரின் பிறப்பிடமான நேபாளம், இலங்கைக்கு ஒரு தனித்துவமான நட்பு நாடாகும். அவ்வாறிருக்கையில் காட்டுமிராண்டித்தனமான செயல்களை இத்தகைய நாட்டில் பொறுத்துக்கொள்ள முடியாது. அரசு நிர்வாகத்தில் காட்டப்பட்ட திறமையின்மையும் இந்த நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது என எண்ணத் தோன்றுகின்றது.
சமூகத்தில் இணக்கமாக ஒன்றுகூடி, இணக்கமாகக் கலந்துரையாடி, இணக்கமாகக் கலைந்து செல்ல வேண்டும் எனப் புத்தர் போதித்தார். புத்தர் போதித்த ‘சப்த அபரிஹானி தர்மய’வை நேபாளத்தின் தற்போதைய அரசாங்கம் ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளும் என நம்புகின்றேன்.” – என்றுள்ளது.
Leave a comment