“எங்களுக்கு எதனையும் மறைக்க வேண்டிய தேவையில்லை. நீதிமன்றத்துக்குச் செல்வதற்கும் தயாராகவே உள்ளோம்.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நல்லாட்சி காலத்தில்தான் சட்டத்தை வளைத்தார்கள் என்று நினைத்தோம். ஆனால், இந்த அரசு இன்னும் அதிகமாகச் சட்டத்தை வளைத்துக் கொண்டிருக்கின்றது போலத் தெரிகின்றது.
எங்களுக்கு மறைக்க ஒன்றும் இல்லை. நீதிமன்றத்துக்கு அழைத்தால் செல்வோம். பொலிஸாரோ , நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவோ, குற்றப் புலனாய்வுப் பிரிவோ எங்கென்றாலும் செல்வோம்.
ஆனால், இன்று பலர் இலங்கையிலேயே இல்லை. மத்திய வங்கி மோசடியை விசாரிக்க வந்த அரசு, இப்போது அவர்களை மீண்டும் அழைத்து வர ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கின்றது. அந்த நிலைக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். எங்களுக்கு மறைக்க ஒன்றும் இல்லை. நியாயமான விசாரணைக்கு எப்போதும் தயாராக இருக்கின்றோம.
அரசின் ஊடகப் பேச்சாளர் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் போனால், 15 வருட பழைய விடயங்களை எடுத்துக்கொள்கின்றார். அவருக்கு நினைவூட்ட விரும்புகின்றேன், நீங்கள்தான் இப்போது அரசு. அதை லால் காந்த மாத்திரம் புரிந்து கொண்டார்.
நீதிமன்றத்தில் சொல்ல வேண்டிய விடயங்களை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஊடகத்தில் சொல்கின்றார். ஏதேனும் சம்பவம் நடந்தால், அதில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆனால் இன்று பொலிஸும் அரசும் சேர்ந்து போலிச் சாட்சிகளை உருவாக்குகின்றார்கள்.” – என்றார்.
Leave a comment