வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்குச் சர்வதேச நீதி கோரி யாழ். செம்மணியில் நடத்தப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று நிறைவுக்கு வந்தது.
இறுதி நாளான இன்று சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் பாரிய தீப்பந்தப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை விவகாரம் தொடர்பாக உள்ளகப் பொறிமுறையை வலியுறுத்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையும் போராட்டக்காரர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் கடந்த 25 ஆம் திகதி ஆரம்பமான உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தது.
வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
போராட்டத்தின் இறுதி நாளான இன்று மதியம் ஒரு மணியளவில் கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்த போராட்டக்காரர்கள், தீப்பந்தங்களையும் ஏந்தியிருந்தனர்.
அதேவேளை, சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி இனப் படுகொலை செய்யப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், இலங்கையில் உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழின அழிப்புக்கும் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கும், போர்க் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகளுக்கும் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருந்ததுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அறிக்கையொன்றையும் அனுப்பி வைத்தனர்.

















Leave a comment