தற்போது நடைமுறையில் உள்ள நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை நீக்குமாறு அல்லது சகல தரப்பினரதும் பங்கேற்புடன் சர்வதேச மனித உரிமைகள் சட்டக் கடப்பாடுகளுக்கு அமைவாக அச்சட்டத்தை திருத்தியமைக்குமாறு சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தொடர்பில் சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவதுபலரதும் விமர்சனத்துக்கு உள்ளான 2024 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க நிகழ் நிலைக் காப்புச் சட்டம் தொடர்பில் திருத்த முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரியிருந்தது.
அதன் பிரகாரம் எமது திருத்தப்பரிந்துரைகளை கடந்த 12 ஆம் திகதி சமர்ப்பித்தோம். அதன்பிரகாரம் தற்போது நடைமுறையில் உள்ள நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை நீக்குமாறும் அல்லது சகல தரப்பினரதும் பங்கேற்புடன் சர்வதேச மனித உரிமைகள் சட்டக்கடப்பாடுகளுக்கு அமைவாக அச்சட்டத்தைத் திருத்தியமைக்குமாறும் நாம்
வலியுறுத்தியுள்ளோம்.
2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் நடைமுறைக்கு வந்த இச்சட்டமானது ஏற்கனவே உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மனித உரிமைகளைப் புறந்தள்ளும் வகையிலும், சிவில் செயற்பாடுகளுக்கான இடைவெளியை மேலும் சுருங்கச் செய்யும் விதத்திலும் அமைந்திருக்கிறது.
இச்சட்டம் கடந்த வருடம் முதல் நடைமுறைக்கு வந்ததிலிருந்து மேற்குறிப்பிட்ட மனித உரிமைகள்சார் அச்சுறுத்தல்களும் உண்மையில் அரங்கேறியிருக்கின்றன.
அரசியல்வாதி ஒருவரின் வழிகாட்டலுக்கு அமைவாக அரசாங்கத்திற்கு எதிராக இணையவெளியில் பிரசாரங்களை முன்னெடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு 2024 பெப்ரவரி மாதம் முதன்முறையாக நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டார்.
இவ்வாறானதொரு பின்னணியில் நிகழ்நிலைக் காப்பு ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள மட்டு மீறிய அதிகாரங்கள் மற்றும் அதற்கான உறுப்பினர் நியமன முறை, இச்சட்டத்தின்கீழ் குற்றங்களாக வரையறுக்கப்படும் விடயங்களின் பரந்துபட்ட தன்மை, பொருத்தமற்ற தண்டனைகள் மற்றும் தடைகள், போதிய நீதிமன்ற மேற்பார்வையின்மை, மாற்றுப்பாலினத்தவர்கள் மீதான மிகையான தாக்கங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவேண்டும் என எமது பரிந்துரைகளில் வலியுறுத்தியுள்ளோம் – என்றுள்ளது.
Leave a comment