அம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நீதிமன்றில் ஆஜரானதையடுத்துப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
2017 ஆம் ஆண்டு அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் அநாகரிகமாக நடந்து கொண்ட குற்றத்துக்காக நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுப் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கு அம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை மீண்டும் அழைக்கப்பட்ட போது, நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தார்.
இதனால் அம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றம் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகப் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால், நாமல் ராஜபக்ஷ நேற்று காலை திருமண நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக மாலைதீவுக்குச் சென்றிருந்த மையால் இன்று மீண்டும் நாடு திரும்பி பிடியாணை உத்தரவுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்து அம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜரானதையடுத்துப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
Leave a comment