முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பில் மூன்றாம் தரப்பினர் ஒருவர் முன்கூட்டியே கணித்திருக்கின்றமை நாட்டின் ஜனநாயகத்தையும் நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டு, பின்னர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் பார்வையிட்டு நலம் விசாரிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சிறைச்சாலை வைத்தியசாலைக்கு இன்று சனிக்கிழமை காலை சென்றிருந்தார்.
அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்
“சமூக ஊடகங்களில் சட்டம் தொடர்பாக கணிப்புகளை வெளியிடுவது நீதிமன்றத்தை அவமதிக்கும். சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை செயல்முறைகள் நடைமுறைப்படுத்தப்படும்போது, சட்டத்தில் குறிப்பிடப்படாத ஒரு மூன்றாம் தரப்பு நபர் அதன் இறுதி விளைவை கணிக்க முடியாது. இத்தகைய நிலைமை மிகவும் ஆபத்தானது.
ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக, பொதுமக்கள் சட்டத்தின் சரியான அமுலாக்கத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும். சட்டத்தின் சரியான அமுலாக்கமும், அது குறித்த பொதுமக்களின் புரிதலும் முக்கியமானது. ஒரு நபர் சமூக ஊடகங்களில் கணிப்புகளை வெளியிடுவதால் ஒரு பயங்கரமான நிலைமை எழுந்துள்ளது.
சட்ட நடவடிக்கைகளின் விளைவுகளை மூன்றாம் தரப்பினர் அறிவதாகக் கூறுவது பொருத்தமற்றது மற்றும் சட்டவிரோதமானது. இத்தகைய சந்தர்ப்பங்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சிறைச்சாலை வைத்தியசாலையில் சந்தித்தேன், அவர் நலமாக உள்ளார். அவரது உடல்நிலையும் பாதுகாக்கப்பட வேண்டும். மேலும் அவரது மருந்துகள் முறையாக வழங்கப்படும் என்று நாங்கள் நம்புகின்றோம்.” – என்றார்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இலண்டனுக்குத் தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக மருத்துவ ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு நாடு திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்கவை இன்று சனிக்கிழமை காலை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.



Leave a comment