தெற்கில் பாதாளக் குழுக்களுக்கிடையிலான மோதல்களே தொடர்ச்சியான துப்பாக்கிப் பிரயோகங்களுக்கு அடிப்படைக் காரணமாக அமைகின்றது என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.
உள்நாட்டில் பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப் படையினரின் பங்கேற்புடன் தேடுதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, வெளிநாடுகளில் உள்ள பாதாளக் குழுவினரை கைது செய்வதற்கு இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ச்சியாக நடைபெறுகின்ற துப்பாக்கிப் பிரயோகங்களால் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் காணப்படுகின்ற கரிசனைகள் தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அண்மைய நாட்களில் நடைபெற்று வருகின்ற துப்பாக்கிப் பிரயோகங்களின் பின்னணியில் பாதாளக் குழுக்களுக்கிடையேயான மோதல்களே காரணமாக இருக்கின்றது.
தெஹிவளையில் நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னணியிலும் அவ்விதமான மோதல் நிலைமையே காணப்படுகின்றது. துப்பாக்கிப் பிரயோகத்துக்கு உள்ளாகியவரும் பாதாளக் குழுச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
துப்பாக்கிப் பிரயோகங்கள் உட்பட பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம். தற்போது விசேட அதிரடிப் படையினரின் பங்கேற்புடன் விசேட தேடுதல் நடவடிக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், சட்டவிரோதமான ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை மீட்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனைவிடவும், நாட்டுக்கு வெளியில் இருந்து பாதாளக் குழுக்களை இயக்குகின்றவர்கள் மற்றும் உள்நாட்டு குற்றங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கும் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து விசேட குழுக்கள் குறித்த நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமான விடயமாகும். அந்தவகையில் நாம் கடும்போக்கான நிலைமையை பொதுவெளியில் பிரயோகிக்க முடியாது. எனினும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினரும் கூட்டிணைந்து செயற்படும் பொறிமுறையொன்று முன்னெடுக்கப்படுகின்றது.
அந்தவகையில் ஒவ்வொரு விடயங்கள் சார்ந்தும் விசேட விசாரணைகள் விரைந்து முன்னெடுக்கப்பட்டே வருகின்றன.
போதைப்பொருள் வியாபாரம், பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அதற்கான பாதையில் சென்று கொண்டிருக்கின்றோம்.” – என்றார்.
Leave a comment