யாழ்.மாவட்டத்தில் காங்கேசன்துறை திஸ்ஸ விகாரையின் காணி உரிமையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் அரசால் முன்னெடுக்கப்பட்டுவருவதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்குடன் செயல்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன் றின் நடவடிக்கைகளால் இந்தப் பணிகள்
பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் காமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த காணி உரிமை தொடர்பான நீண்டகால பிரச்னையை தீர்க்க நில அமைச்சுடன் இணைந்து அமைச்சு செயல்பட்டு வருவதாகவும், திட்டமிட்ட முறையில் மோதலை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பின்னணியில், கடந்த டிசெம்பர் 21ஆம் திகதி தையிட்டி கிராம சேவகர் பிரிவில் உள்ள விகாரைக்கு முன்பாக சட்டவிரோத போராட்டத்தில் ஈடுபட்டதாக ஐந்து பேர் பலாலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு தலா ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், ஜனவரி மாதம் 26ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டம் இலங்கை தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் உள்ளிட்ட குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், விகாரை அமைந்துள்ள காணிகளை பொதுமக்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
போராட்டக்காரர்கள் விகாரை வளாகத்துக்குள் பலவந்தமாக நுழைய முயன்றபோது மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னரும், கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம், குறித்த விகாரையை சட்டவிரோத கட்டடம் எனக் குறிப்பிட்டு அதை அகற்றுவதாக எச்சரிக்கை
விடுக்கப்பட்டிருந்தது.
Leave a comment