திருகோணமலை கோட்டை வீதியில் அமைந்துள்ள சிறீ சம்புத்த ஜெயந்தி விகாரைக்குச் சொந்தமான தற்காலிக கட்டடத்தின் தற்போதைய கட்டுமானத்தை இடைநிறுத்துமாறும் புதிய கட்டுமானம் அல்லது மாற்றங்கள் எதையும் செய்யக்கூடாது என்றும் திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் விகாராதிபதிக்கு நேற்று உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை பொலிஸ் கண்காணிப்பாளர்
ஜே.எல். அஜித் குமார, துறைமுக பொலிஸ்பொறுப்பதிகாரி மற்றும் தலைமை ஆய்வாளர் கே.டபிள்யூ.ஜி.எஸ்.கே. சமரசிங்க ஆகியோர் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த பின்னர் நீதிவான் எம். என்.எம். சம்சுதீன் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
திருகோணமலையில் உள்ள டச்சு விரிகுடா கடற்கரையில் சிறீ சம்புத்த ஜெயந்தி விகாராதிபதி தற்காலிக கட்டடம் கட்டுவது தொடர்பாக, கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவ பிரிவு தாக்கல் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து பொலிஸார் நீதிமன்றத்தில் பி அறிக்கையை சமர்ப்பித்தனர்.
இதன்போது, முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிவான், தொடர்புடைய கட்டுமானத்தின் முன்னேற்றம் மற்றும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைக் குறிக்கும் அறிக்கையை எதிர்வரும் 26ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு துறைமுக பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இதேசமயம், விகாரை கட்டுமானத்தை அகற்றுமாறு கரையோர பாதுகாப்பு திணைக்களம் விடுத்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கு தடை உத்தரவு கோ மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் டிசெம்பர் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.
Leave a comment