கிளிநொச்சி – தட்டுவன்கொட்டி பகுதியில் மீண்டும் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் தட்டுவன்கொட்டிப் பகுதியில் அண்மையில் வெடிபொருள்களைக் கையாண்ட இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அத்துடன், மேலும் சில இடங்களிலும் வெடிபொருள்கள் அவதானிக்கப்பட்டுள்ளன. இதையடுத்தே, அங்கு மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணிகளை மீண்டும் முன்னெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அந்தப் பகுதி மக்கள் மேலும் தெரிவித்ததாவது:-
“போரின் பின்னர் மீளக் குடியமர்த்தப்பட்டு கடந்த 15 வருடங்களாக நாங்கள் இங்கு வசித்து வருகின்றோம். இந்த இடைப்பட்ட காலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்ணிவெடிகள் அவதானிக்கப்பட்டு, அது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டு, பின்னர் அவை மீட்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் விளையாடுவதற்காக வெளியில் செல்லும்போதுகூட அச்சமான சூழலுக்குள்ளேயே அனுப்பி வைக்க வேண்டியுள்ளது. எனவே, இந்த விடயத்தைக் கருத்திற்கொண்டு, தட்டுவன்கொட்டியில் மீண்டும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும்.” – என்றனர்.
Leave a comment