ஜப்பான் அரசின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜப்பான் பிரதமர் அலுவலகத்தில் நேற்றுக் காலை நடைபெற்றது.
ஜப்பான் பிரதமர் அலுவலகத்துக்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவினால் மகத்தான வரவேற்பு அளிககப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜப்பானிய சுய பாதுகாப்புப் படையின் மரியாதையை ஏற்றுக்கொண்டதுடன், அந்த அணிவகுப்பை பார்வையிடவும் இணைந்தார்.
இருநாட்டு பிரதிநிதிகள் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு ஆரம்பமானது.
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்ட கால நெருங்கிய நட்புறவைத் தொடர்ந்து பலப்படுத்தி, இருநாடுகளுக்கும் இடையில் வர்த்தக,முதலீடு, பொருளாதார, அபிவிருத்தி உதவி மற்றும் வலய பாதுகாப்பு போன்ற விடயங்களை உள்ளடக்கும் வகையில் பல்வேறுபட்ட துறைகளிலான ஒத்துழைப்பை தொடர்ந்து பரவலாக்குவது குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
இரு தரப்பினருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவியைத் தொடர்ந்தும் பிரதிபலிக்கும் வகையில், பால் துறையில் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான திட்டம் மற்றும் உத்தியோகபூர்வ பாதுகாப்பு உதவித் திட்டம் குறித்த பரிமாற்று ஆவணம் கைச்சாத்திடும் நிகழ்வும் இதன்போது நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கூட்டு ஊடக சந்திப்பில் உரையாற்றிய ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா இந்து சமுத்திரத்தில் கேந்திர முக்கியத்துவமான இடமாக அமைந்துள்ள இலங்கையின் ஸ்தீரத்தன்மை மற்றும் அபிவிருத்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், அதற்கமைய இலங்கையுடனான கூட்டாண்மையை மேலும் மேம்படுத்தி விஸ்தரிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, “அந்நியோன்ய நம்பிக்கை, கௌரவம் மற்றும் பலமான தொடர்பில் அடிப்படையிலே இலங்கை மற்றும் ஜப்பான் இடையிலான நீண்டகால நட்புறவு தங்கியுள்ளது. ஜப்பான் பிரதமருடனான பேச்சுவார்த்தை இலங்கை – ஜப்பான் இடையிலான தொடர்புகளின் முக்கிய மைல்கல்லைக் குறிக்கின்றது. அந்த உடன்பாடுகளின் முழுமையான பலனை அடைந்து அபிவிருத்தி மற்றும் ஸ்தீரத்தன்மைக்கான பயணத்தில் ஜப்பானுடன் இணைந்து பணியாற்ற இலங்கை அர்ப்பணிப்புடன் இருக்கின்றது.” – என்று சுட்டிக்காட்டினார்.
ஜப்பான் அரசின் ஒத்துழைப்புடன் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு, கடந்த பொருளாதார நெருக்கடியினால் இடையில் கைவிடப்பட்ட 11 அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பித்து அதன் பலனை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக ஜப்பான் அரசு வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதிய கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்கு வழங்கிய ஒத்துழைப்பிற்காக ஜனாதிபதி இதன்போது ஜப்பானுக்கு நன்றி தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா இடையிலான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையின் பின்னர் இரு தரப்பினால் கூட்டு அறிக்கையொன்று ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டன.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர், பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க,டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.


Leave a comment