ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாளை காலை நாட்டிலிருந்து புறப்படவுள்ளார். அவருடன் வெளிவிவகார அமைச்சின் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பணிப்பாளர் நாயகம் தயானி மென்டிஸ் மாத்திரம் கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வு நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில் இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை சார்பாகப் பங்கேற்கவுள்ள வெளிவிவகார அமைச்சரின் பயண விபரங்கள் குறித்து அமைச்சின் உயர் அதிகாரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், ஜெனீவா கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நாளை காலை 7 மணியளவில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பயணமாகவுள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன், இம்முறை அவருடன் வெளிவிவகார அமைச்சின் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பணிப்பாளர் நாயகம் மாத்திரமே பயணிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதற்கமைய, ஜெனீவாவில் அமைச்சர் விஜித ஹேரத் நாளை மறுதினம் திங்கட்கிழமை அந்த நாட்டு நேரப்படி பிற்பகல் ஒரு மணிக்கு உரையாற்றவுள்ளதாகவும் அமைச்சின் அதிகாரி தெரிவித்தார்.
இதன்போது, மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் முன்வைத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள சர்வதேச விசாரணை பொறிமுறையை நிராகரிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகம் உள்ளிட்ட ஏனைய அலுவலகங்களின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தி, உள்ளக பொறிமுறையின் கீழ், தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்பதை வலியுறுத்த இருப்பதாகவும் அமைச்சின் அதிகாரி கூறினார்.
நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்திருத்தம் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான வர்த்தமானி குறித்தும் அமைச்சர் விஜித ஹேரத் எடுத்துரைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், இலங்கையிலும் சர்வதேசத்திற்கு மத்தியிலும் பேசு பொருளாகவுள்ள யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி விவகாரம் குறித்து அமைச்சர் விஜித ஹேரத் தெளிவுபடுத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Leave a comment