செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை சுமார் 200 பேர் வரையில் பார்வையிட்டிருந்தனர் என தெரிவித்த சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா எவரும் எதனையும் அடையாளம் காட்டவில்லை என்றார்.
செம்மணி அகழ்வுப்பணிகள் இரண்டாம் கட்டத்தின் 31 ஆவது நாள் யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் செவ்வாய்க்கிழமை (5) முன்னெடுக்கப்பட்டது.
அகழ்வு பணிக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
புதிதாக ஆறு மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளது.
நான்கு மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்ற கட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளது.
141 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு இலக்கமிடப்பட்டதுடன் 130 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்ற கட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளது.
வழமையைப் போல அகழ்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெறும்.
இதேவேளை செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை சுமார் 200 பேர் வரையில் பார்வையிட்டிருந்தனர்.
புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் 1.30 மணி முதல் மாலை 05 மணி வரையில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றை சுமார் 200 பேர் வரையில் பார்வையிட்டிருந்தனர்.
எவரும் அவற்றை அடையாளம் காட்டவில்லை.
தனிமனிதனோடு தொடர்புடைய சான்று பொருட்களை காட்சிப்படுத்தப்பட்டது. இனிவரும் காலங்களிலும் தனிமனிதனோடு தொடர்புடைய சான்று பொருட்கள் மீட்கப்பட்டால் அவற்றையும் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை செம்மணி மனித புதைகுழி அமைந்துள்ள அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் நடைபெற்ற ஸ்கான் பரிசோதனை தொடர்பான இறுதி அறிக்கை எதிர்வரும் மூன்று வாரத்தில் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் – என்றார்.
Leave a comment