சர்வதேச நீதி கோரி ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து “நீதியின் ஓலம்” கையெழுத்துப் போராட்டம் இன்று (சனிக்கிழமை யாழ். செம்மணியில் முன்னெடுக்கப்பட்டது.
தாயகச் செயலணி அமைப்பினரால் தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரலை வலியுறுத்தியே இந்த
‘நீதியின் ஓலம்’ எனும் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்தப் போராட்டம் இன்று காலை 10 மணியளவில் மாணவி கிருசாந்தி கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய செம்மணிப் பகுதியில் அணையா விளக்கு போராட்ட தூபி அமைந்துள்ள இடத்தில் முன்னெடுக்கப்பட்டது.
மரணித்த உறவுகளை நினைவுகூர்ந்து மௌன வணக்கம் செலுத்தப்பட்டு நினைவுச் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமான இந்த நிகழ்வில் நிகழ்வின் வடக்கின் ஏற்பாடுக் குழு இணைபாளர் ஜெயசித்திரா போராட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து கையெழுத்துப் பெறும் நிகழ்வு ஆரமிக்கப்பட்டது. தொடர்ந்து ஐந்து நாட்களுக்குத் தமிழர் தாயகமெங்கும் இந்தக் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்படும்.
இந்தக் கையெழுத்துப் போராட்டத்தின் ஊடாக இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி உட்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளுக்கும் முழுமையான சர்வதேச நீதி விசாரணை நடைபெற வேண்டும் என் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது வலுவான தீர்மானம் கொண்டு வந்து, அனைத்து நாடுகளும் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் எனவும் இந்த போராட்டம் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.









Leave a comment