நீதிக்கான பயணத்தில் செம்மணி மனிதப் புதைகுழி புதிய கதவுகளை திறந்துவிடும். இவை பெரியளவில் மக்கள் கொன்று புதைக்கப்பட்டபுதைகுழிகள் இது மனிதபடுகொலை யுத்த குற்றம் இடம்பெற்ற இடம் இராணுவத்தினரே செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. என தெரிவித்துள்ள சிரேஸ்ட சட்டத்தரணி கேஎஸ் இரத்தினவேல் கடந்தகால அரசாங்கங்களை போலவே தற்போதைய அரசாங்கமும் செயற்படுவதாக தெரிவித்துள்ளார்.
கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம்பெற்ற ‘வன்மம்” கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கு நூல் அறிமுகநிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
கிருஷாந்தி குமாரசுவாமி கொலை செம்மணி என்ற பாரிய புதைகுழியை திறந்துவிட்டது.
சோமரத்ன ராஜபக்ச தனது வாக்குமூலத்தின்போது ‘ நான் மாத்திரம் இதில் தொடர்புபட்டிருக்கவில்லை, ஜெனரல்கள் தர அதிகாரிகள் கூட இதில் தொடர்புபட்டிருக்கின்றனர், அவர்கள் வழங்கும் உடல்களை நாங்கள் செம்மணியில் புதைப்போம்” என தெரிவித்திருந்தார்.
செம்மணி புதைகுழிகளில் 500க்கும் மேற்பட்ட உடல்கள் புதைக்கப்பட்ட என அவர் வாக்குமூலம் வழங்கியதை தொடர்ந்து இடம்பெற்ற அகழ்வுகளின் போது 1999 இல் 15 உடல்களை மீட்டார்கள்.
ஆனால் தொடர்ந்து உடல்களை அகழ்வதை ஏதோ ஒரு காரணத்திற்காக நிறுத்திவிட்டார்கள், அரசியல் அழுத்தம் என்றார்கள்.
எனினும் இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடித்திருக்கின்றது.
சித்துப்பாத்தி இந்துக்களின் மயானம், அங்கு உடல்கள் புதைக்கப்படுவது இல்லை, அங்கு உடல்கள் எரிக்கப்படுகின்றன,சுடுகாடு..
செம்மணி மனித புதைகுழியில் 500க்கும் மேற்பட்ட உடல்கள் இருக்கலாம் என அனுமானிக்கப்படுகின்றது.
ஸ்கான் நிறைவடைந்த நிலையில் மேலும் பல பகுதிகளில் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்பது தெரியவந்துள்து.
இவை சாதாரண புதைகுழிகள் இல்லை, பெரியளவில் மக்கள் கொன்று புதைக்கப்பட்டபுதைகுழிகள்.
இதனை செய்தவர்கள் அக்காலப்பகுதியில் சட்டத்திற்கு மேற்பட்டவர்களாக விளங்கியுள்ளனர், தங்களை சட்டத்திற்கு மேற்பட்டவர்களாக கருதியுள்ளனர்,சட்டத்தை பற்றி கவலைப்படாதவர்களாக காணப்பட்டுள்ளனர்.
1995ம் ஆண்டின் பின்னர் யாழ்குடாநாட்டிலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகள் முற்றாக வெளியேற்றப்பட்ட பின்னரே இது இடம்பெற்றுள்ளது.
1995 முதல் 2009 வரை இராணுவத்தினர் கேட்டுக்கேள்வி இல்லாதவர்கள் போல செயற்பட்டனர்.
யாழ் குடாநாட்டை முழுமையாக தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர்.சட்டத்திற்கு மேற்பட்ட அதிகாரங்கள் அவர்களிற்கு காணப்பட்டன.
அவர்கள் சட்டத்திற்கு பயப்படாதவர்களாக தான்தோன்றித்தனமாக செயற்படுபவர்களாக காணப்பட்டனர்.
இராணுவத்தினரே செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.
புதிய அரசாங்கம் காரணமாகவே செம்மணி மனித புதைகுழி அகழ்வு சாத்தியமானது என சிலர் தெரிவிக்கின்றனர், காலம்தான் இதற்கு பதில்சொல்லவேண்டும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோர்க்கர் டேர்க்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் என தகவல் வெளியானதும் அவர் கட்டாயம் செம்மணி மனித புதைகுழி காணப்படும் பகுதியை சென்று பார்க்கவேண்டும், நேரடியாக சென்று பார்க்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
இது முக்கியமான விடயம் அவர் செம்மணிக்கு செல்வது குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்தது.
அவர் கட்டாயம் செம்மணிக்கு விஜயம் செய்யவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம், இலங்கை வெளிவிவகார அமைச்சும் இதற்கு சாதகமான பதிலை வழங்கியிருந்தது.
எனினும் பின்னர் திடீர் என செம்மணி புதைகுழி நீதவான்நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதால் மனித உரிமை ஆணையாளர் அங்கு விஜயம் மேற்கொள்வதற்கு அவருடைய அனுமதி அவசியம் என தெரிவித்தார்கள்.
அந்த காலப்பகுதியில் அகழ்வுகள் நிறுத்தப்பட்டிருந்ததால் அவரின் அனுமதி அவசியம் என்றார்கள்.
அனுமதி பெறும் விடயத்தை காணாமல்போனோர் அலுவலகம் செய்யும் என்றார்கள் எனினும் பின்னர் திடீர் என சட்டமா அதிபர் திணைக்களம் கையாளும் என்றார்கள்.
சட்டமா அதிபர் திணைக்களம் என்றால் இனி ஒன்றும் நடக்காது என்பது எங்களிற்கு தெரியும்.
அதன் காரணமாக நாங்கள் உடனடியாக நீதவான் நீதிமன்றத்தை நாடி அனுமதியை கோரினோம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நேரடியாக சென்று பார்வையிடுவதற்கான அனுமதியை வழங்குமாறு கோரினோம்.
நீதிமன்றத்தில் அரசாங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி ஆஜராகியிருந்த பொலிஸ் அதிகாரியொருவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மயானத்தின் கேட்டிற்கு வெளியேதான் நிற்கலாம் அவருக்கு உள்ளே செல்வதற்கு அனுமதி வழங்க முடியாது என தெரிவித்தார்.
எனினும் நாங்கள் இது மிகமுக்கிய – சர்வதேச இராஜதந்திரியை அவமதிக்கும் செயலாக அமையும், இலங்கை அரசாங்கத்துடனான உடன்பாட்டின் அடிப்படையிலேயே வோல்க்கெர் டேர்க் செம்மணிக்கு வருகின்றார் என சுட்டிக்காட்டினோம். அதனை தொடர்ந்து நீதவான் அதற்கான அனுமதியை வழங்கினார்.
நாடாளுமன்றத்தில் ஒன்றை சொல்கின்றார்கள் வெளியே வேறொன்றை செய்கின்றார்கள்.
கடந்தகால அரசாங்கங்கள் எப்படி செயற்பட்டனவோ அதேபோன்றே இந்த அரசாங்கமும் செயற்படுகின்றது.
நிதி அனுமதியை பெறுவது மிகவும் கடினமான விடயமாக உள்ளது.
இது மனிதபடுகொலை யுத்த குற்றம் இடம்பெற்ற இடம்,ஒரு அடி தோன்றினாலே உடல்கள் வெளிவருகின்றன.சம்பிரதாய பூர்வமாக அவை புதைக்கப்படவில்லை.
இந்த உடல்கள் ஆடைகள் அற்ற விதத்தில் மரியாதை குறைவான விதத்தில்புதைக்கப்பட்டுள்ளன,சிறுவர்களின் உடல்கள் காணப்படுகின்றன.
இது யுத்தத்தில் மரணித்தவர்கள் தொடர்பான புதைகுழியில்லை
எங்கள் சரித்திரத்தில் , எங்கள் விடயங்களை நீதிமன்றம் மிகவும் குறைவான – வரையறுக்கப்பட்ட விதத்திலேயே அணுகியிருக்கின்றது.
எங்கள் மக்களிற்கு நீதிமன்ற கட்டமைப்பில் நம்பிக்கையில்லை,பாதிக்கப்பட்ட மக்கள் காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் சர்வதேச விசாரணைகளையே எதிர்பார்க்கின்றனர் நம்புகின்றனர், உள்நாட்டு பொறிமுறையை அவர்கள் நம்புவதற்கான எந்த தடயமும் இல்லை..
சில அரசியல்வாதிகள் கூறுவதற்கு மாறாக எங்களிற்கு வேறு சாத்தியப்பாடுகளும் உள்ளன.
வேறு பல நாடுகளில் தற்காலிக தீர்ப்பாயங்களை நிறுவியுள்ளனர்.அதற்காக அவர்கள் சர்வதேச சட்டங்களை உருவாக்கியுள்ளனர்.
செம்மணி மனித புதைகுழி நிச்சயமாக மிகவும் முக்கியமானது நீதிக்கான பயணத்தில் செம்மணி மனித புதைகுழி புதிய கதவுகளை திறந்துவிடும்.
Leave a comment