“அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபை வேட்புமனுக்களை சவாலுக்கு உட்படுத்தி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினுடைய தீர்ப்பு இன்னமும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படவில்லை. நீதிமன்றத் தீர்ப்பு தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெற்றதன் பிற்பாடு தேர்தல்கள் ஆணைக்குழு கூடி இது சம்பந்தமாக முடிவுகளை எடுக்கும்.” – இவ்வாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபை வேட்புமனுக்களைச் சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியிருந்தது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நியமனப் பத்திரங்களைக் கையளிக்கும் போது குறித்த நபர்கள் அந்த எல்லைக்குள் வசிப்பவர்களா என்பதைத் தேர்தல் திணைக்களம் சட்ட திட்டங்களின் பிரகாரம் ஆராய்வதில்லை. சாவகச்சேரி பிரதேச சபை, நகர சபையினுடைய அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் வேட்புமனுக்கள் கையளிக்கப்படும் போது ஆட்சேபனைக்குரிய காலப் பகுதியில் எதுவித ஆட்சேபனைகளும் வெளிப்படுத்தப்படவில்லை. அந்த அடிப்படையிலேயே சாவேச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைக்கான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன.
இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினுடைய தீர்ப்பு இன்னமும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படவில்லை. நீதிமன்றத் தீர்ப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெற்றதன் பிற்பாடு தேர்தல்கள் ஆணைக்குழு கூடி இது சம்பந்தமாக முடிவுகளை எடுக்கும்.
தனிப்பட்ட நபருடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டுவதால் அவர் சார்ந்த கட்சியினுடைய வேட்புமனு முற்றுமுழுதாக நிராகரிக்கப்படாது. ஆனால், ஒருவருடைய வேட்புமனு நிராகரிக்கப்படுவதால் பெண்கள், இளைஞர்களுக்கான ஒதுக்கீடுகள் அதில் பூர்த்தி செய்யப்படாமல் இருக்குமாக இருந்தால் அவற்றை நிராகரிக்க முடியும். எனவே, நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழு கூடி சாவகச்சேரி நகர சபை, பிரதேச சபை தொடர்பில் முடிவெடுக்கும்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வறிதாக்கப்பட்டால் சட்ட திருத்தங்களின் பிரகாரம் அந்தச் சுயேச்சைக் குழு சார்பாக இரண்டாம் இடத்தில் முன்னிலையில் உள்ள வேட்பாளருக்கு அந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெளிப்படுத்தப்படும்.” – என்றார்.
Leave a comment