சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டரப்படுவது தொடர்பில் அடுத்தவார இறுதிக்குள் தீர்மானிக்கப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
சபநாயகருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப்பிரேரணை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி கொறடாவுமான கயந்த கருணாதிலக்க தெரிவிக்கையில்,
சபாநாயகர் மீதான நம்பிக்கை இழப்பு குறித்து நாங்கள் தற்போது ஆய்வு செய்து வருகிறோம். அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வருவது தொடாபில் பரிசீலிக்க வேண்டும் என்று எங்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர்.
அந்த வகையில் அந்த விடயம் சம்பந்தமாக அடுத்தவாரம் இறுதி முடிவினை எடுப்போம் என்றார்.
முன்னதாக, எதிர்க்கட்சியின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க சபாநாயகர் தவறினால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார எச்சரிக்கை விடுத்திருந்தார்.
குறிப்பாக, பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக சட்டமா அதிபர் அறிக்கை மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் அறிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கடந்த 10ஆம் திகதி சபாநாயகர் ஜகத் விக்ரமத்ன தனது முடிவினை அறிவித்திருந்தார்.
இதனையடுத்து எதிர்க்கட்சிகள் அந்த அறிவிப்புக்கு எதிராக கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்ததோடு பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் சட்டமா அதிபரின் அறிக்கை ஆகியவற்றை சபையில் சமர்ப்பிக்குமாறு கோரியிருந்தது.
எனினும், அதற்கு ஆளும் தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த அறிக்கைகளை நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பித்த உறுப்பினர்கள் சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து பார்வையிட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அடுத்தவாரம்,
பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அந்த அறிக்கையை பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment