யாழ். வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் முதன்முறையாக ஒரே நேரத்தில் இன்று 111 ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட திருமணம் செய்யாத மற்றும் பதிவுத் திருமணம் செய்து தாலி கட்டாதவர்கள் உள்ளிட்ட 111 ஜோடிகளுக்குச் சிங்கப்பூரைச் சேர்ந்தவரும் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட துரை தம்பதியினரால் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
திருமணத்தின் போது அரைப்பவுண் தாலி, கூறைச் சேலை மற்றும் இதர செலவுகளையும் குறித்த சிங்கப்பூர் தம்பதிகள் வழங்கி குருமார்களின் ஆசியுடன் விசேட பூஜை ஆராதனைகள் இடம்பெற்று அனைத்து தம்பதியினரும் சுபமுகூர்த்த வேளையில் தாலி கட்டிக்கொண்டனர்.
திருமணத்துக்காக 111 தம்பதிகளையும் தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாணம் பிரதேச செயலர் ச.சுதர்சன், யாழ்ப்பாணம் வணிகர் கழகத் தலைவர் இ.ஜெயசேகரன் ஆகியோர் மேற்கொண்டார்.
சிங்கப்பூர் தம்பதியினர் தமது மகளுக்குத் திருமணம் செய்ததையடுத்து இவ்வாறு ஏனையவர்களுக்கும் தமது சொந்த நிதியினூடாக திருமணம் செய்து வைக்க எண்ணிய உயரிய சிந்தனையை மணமக்கள் மனதார வாழ்த்தி நின்றனர்.
எமது சமூகத்தில் அதிக பண வசதி படைத்தவர்கள் வாழ்ந்து வரும் சூழலில் இவ்வாறு திருமணம் செய்ய முடியாதவர்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்திய தம்பதியினருக்குப் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணமுள்ளன.
















Leave a comment