முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்யும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறுவார்.
ஜனாதிபதி சட்டமூலங்களை கொண்டு வரும்போது தனது எதிர்காலம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் ஏதும் நிலையற்றது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்யும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறுவார். இவற்றை நாங்கள் கேட்டு வாங்கவில்லை. அரசியலமைப்பினால் கிடைக்கப்பெற்றது.
முன்னாள் ஜனாதிபதிகள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் ஜனாதிபதி தனது எதிர்காலம் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும். இந்த நாட்டில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இன்றும் பல்வேறு அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன.
நாங்கள் வெறுப்புடன் அரசியல் செய்யவில்லை. எனக்கு எதிராக பெரும்பாலான வழக்குகள் நல்லாட்சி அரசாங்கத்தில் தான் தாக்கல் செய்யப்பட்டன. இருப்பினும் நாங்கள் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேனவுடன் ஒன்றிணைந்து அரசியல் செய்தோம். அரசியலை நாங்கள் வெறுப்புடன் பார்க்கவில்லை. ஜனாதிபதி மாலைத்தீவுக்கு அரச பயணத்துக்காக சென்றார்.
நான் எனது தனிப்பட்ட தேவைக்காக சென்றேன். இருவரும் ஒரே விமானத்தில் தான் சென்றோம். இதுவொன்றும் பெரிய விடயமல்ல, அரசியல் கட்சி வேறுபட்டதாக இருக்கலாம். இருப்பினும் அனைவரும் இலங்கையர்களே.
விடுதலை புலிகள் அமைப்பு பயங்கரவாத செயற்பாட்டுடன் இராச்சியத்தை பலவீனப்படுத்த முயற்சித்தது. அந்த முயற்சி தோற்கடிக்கப்பட்டது. ஆனால், இந்த அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்து இராச்சியத்தை பலவீனப்படுத்தும் வகையில் செயற்படுகிறது. அரச அதிகாரிகள் சுயாதீனமான முறையில் செயற்பட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார்.
Leave a comment