இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவு செய்யப்பட்டார்.
அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராகப் பணியாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் 2025.08.06ஆம் திகதியன்று அந்தப் பதவியை இராஜிநாமாச் செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில் இன்று வெள்ளிக்கிழமை கூடிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தெரிவு இடம்பெற்றது.
தலைவர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிமின் பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல முன்மொழிந்ததுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன வழிமொழிந்தார்.
இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த புதிய தலைவர் கபீர் ஹாசிம், அரசியல் கருத்து வேறுபாடுகள் இன்றி நடுநிலையாகச் செயற்பட்டு சகல உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் தனது பதவியை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன், முன்னாள் தலைவர் நாடாளுமன்றஉறுப்பினர் அரவிந்த செனரத் பணிகளைப் பாராட்டியதுடன், அவர் மேற்கொண்ட பணியைத் தொடர்ச்சியாக எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாகச் செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் புதிய தலைவர் குறிப்பிட்டார்.
புதிய திட்டங்களை வகுப்பதன் மூலம் கோபா குழுவின் பங்கை மேலும் நெறிப்படுத்தவும் பராமரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் புதிய தலைவர் மேலும் தெரிவித்தார்.
Leave a comment