கொலை அச்சுறுத்தல் விடுத்தமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை, கொள்ளைகளில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றங்களுடன் தொடர்புடைய நபருக்கு, கிளிநொச்சி மேல் நீதிமன்றம் ஐந்து ஆண்டுகால கடூழியச் சிறைத் தண்டனை விதித்து
தீர்ப்பளித்துள்ளது.
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 08ஆம் திகதி, நபரொருவர் ஓட்டோ சாரதியை கத்திமுனையில் அச்சுறுத்தி அவருடைய ஓட்டோவை கடத்தியிருந்தார்.
அத்துடன், பொலிஸாரின் கட்டளையை மீறிப் பயணித்தது, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது ஓட்டோவால் மோதி படுகாயங்களையும் ஏற்படுத்தியிருந்தார்.
இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிரான வழக்கு கிளிநொச்சி மேல் நீதி மன்றில் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கு கிளிநொச்சி மேல்
நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா முன்னிலையில், நேற்று தீர்ப்புக்காக
எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே குறித்த நபருக்கு ஐந்து ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
அத்துடன், பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 03 லட்சத்து 50 ஆயிரம் ரூபா இழப்பீடும், மற்றையவருக்கு 5 இலட்சம் ரூபா இழப்பீடும் செலுத்த வேண்டும். தவறினால்
முறையே, ஒரு வருட சிறைத் தண்டனையும், இரண்டு வருடகால சிறைத்தண்டனையையும் கூடுதலாக அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Leave a comment