இலங்கையின் பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் பிரச்னைகள் தொடர்பில் ஒரு பொறிமுறையை கோரி, பிரிட்டன் தலைமையிலான நாடுகளின் முக்கிய குழு இந்த மாத இறுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அதன் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை முன்வைக்கும்போது, வாக்கெடுப்பு கோருவதில்லை என்று இலங்கை முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகியவை முக்கிய குழுவில் உள்ள ஏனைய உறுப்பு நாடுகள் ஆகும்.
இலங்கை இந்த ஆண்டு ஒரு புதிய தீர்மானத்தை எதிர்கொள்கிறது. அரசாங்கத்தின் சார்பாக, வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் நேற்று முன் தினம் ஜெனிவாவில் ஓர் அறிக்கையை வெளியிட்டார்.
இலங்கை உள்நாட்டு பொறி முறையின் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் முயற்சியைத் தொடரும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஒரு நாடாக இலங்கை எந்தவொரு வெளிப்புற பொறிமுறையையும் எதிர்த்தாலும், மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் பிரச்னைகளை கையாள்வதில் சர்வதேச சமூகத்தின் தொழில்நுட்ப உதவியை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
செம்மணி மனித புதைகுழி தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூட்டு எச்சங்கள் தொடர்பான விசாரணைகளைத் தொடர்வதில் இத்தகைய உதவி தேவைப்படலாம் என்று கருதப்படுகிறது.
முன்மொழியப்பட்ட தீர்மானத்தின் வரைவு இன்னும் ஜெனீவாவில் சுற்றுக்கு விடப்படவில்லை. தீர்மானத்தை முன்வைப்பதற்கு முன்னதாக, அதனுடன் நட்பு கொண்ட நாடுகளிடம், நல்லிணக்கத்தை நோக்கி அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவான உரைகளை நிகழ்த்துமாறு கோர இலங்கை திட்டமிட்டுள்ளது.
Leave a comment