மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் மீண்டும் கலந்தாலோசிப்புகள் இடம்பெற்று வருவதால் தேர்தல் ஆணைக்குழுவால் நிறைவு செய்யப்பட்டுள்ள எல்லை நிர்ணய அறிக்கையை தற்போதைய அரசு மீள்பரிசீலனை செய்யவேண்டுமென்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் இந்த எல்லை நிர்ணய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது
எவ்வித மீள்பரிசீலனையும் செய்யாமலேயே அப்போதைய பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களும் அந்த அறிக்கையை நிராகரித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச பொட்ஸ்வானா சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவால் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவுக்கு உலகின் சிறந்த தேர்தல் ஆணைக்குழு என்ற கௌரவ விருது வழங்கல் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது,
ஓய்வு பெறவுள்ள தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்கவின் சேவையைப் பாராட்டி பவ்ரல் அமைப்பால் விசேட நிகழ்வொன்றும் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்ததுடன், இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
குறிப்பிட்ட காலப்பகுதியில் தேர்தல்களை நடத்தி முடித்துள்ளோம். அதேபோன்று, தேர்தல் ஆணைக்குழு உரிய காலப்பகுதிக்குள் எல்லை நிர்ணய அறிக்கையையும் நிறைவு செய்தது-என்றார்.
Leave a comment