“இலங்கையில் நடைமுறையிலுள்ள பல கட்சி ஆட்சி முறைமையை ஒழித்து ஒரு கட்சி ஆட்சியை நிலைநிறுத்தத் தேசிய மக்கள் சக்தி அரசு முயற்சிக்கிறது. அரசின் இந்தச் சர்வாதிகாரப் போக்கைத் தடுப்பதற்காகவே இன்று எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்தமைக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு விசேட நன்றிகளைக் கூறுகின்றோம்.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஆட்சியைப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதற்கு முன்னரே எதிர்க்கட்சிகளை இவ்வாறு ஒன்றிணைத்தமைக்கு அவருக்கு விசேட நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
நாம் எதற்காக ஒன்றிணைந்தோம் என்பதை அனைவரும் அறிவர். ரணில் விக்கிரமசிங்க என்பது ஒரு காரணியாகும். ஆனால், இந்தத் தேசிய மக்கள் சக்தி நாட்டில் தொடர்ந்தும் காணப்படும் பல கட்சி ஆட்சி முறைமையை இல்லாதொழித்து ஒரு கட்சி ஆட்சி முறைமையை ஏற்படுத்த முயற்சிக்கின்றது.
இதற்காக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் என அனைத்தையும் அடக்கும் செயற்பாடுகளை ஜே.வி.பி. முன்னெடுத்து வருகின்றது. தாம் நினைப்பது மாத்திரமே சரி என்ற நிலைப்பாட்டிலேயே அரசு இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்தச் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகவே நாம் ஒன்றிணைந்துள்ளோம். நாட்டு மக்கள் ஜனநாயகத்தையே விரும்புகின்றனர். எனவேதான் அரசியல் பேதங்கள் இன்றி ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக எம்மை ஒன்றிணைத்தமைக்கு ஜனாதிபதிக்கு விசேடமாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இன்று நாட்டில் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே சகலரும் காணப்படுகின்றனர். கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு அதிகளவில் வாக்களித்து மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். தற்போது நாட்டில் அரசுக்கு எதிராகப் பொது மக்களே உள்ளனர். குறிப்பாக தொழிற்சங்கள் இதனை நன்கு அறிந்துகொண்டுள்ளன.
இன்று செவ்வாய்க்கிழமை ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான தினமாகும். ஜனநாயகத்தைப் பாதுகாக்க விரும்பும் அனைவரும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.” – என்றார்.
Leave a comment