Home தென்னிலங்கைச் செய்திகள் உள்நாட்டுப் பொறிமுறை மூலம் நல்லிணக்கத்தை அடைய முடியும் – கூட்டத் தொடரில் விஜித ஹேரத் தெரிவிப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

உள்நாட்டுப் பொறிமுறை மூலம் நல்லிணக்கத்தை அடைய முடியும் – கூட்டத் தொடரில் விஜித ஹேரத் தெரிவிப்பு!

Share
Share

“இலங்கையின் இறையாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றோம். சர்வதேச தலையீடுகளை நிராகரிக்கின்றோம். உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை அடைய முடியும் என நம்புகின்றோம்.” இவ்வாறு இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

“வெளித் தலையீடுகள் அதன் உள்நாட்டு நீதி மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்குத் தடையாக இருக்கும். இலங்கை மக்கள் ஒரு நியாயமான, சமமான மற்றும் வளமான சமுதாயத்தை உருவாக்க விரும்புகின்றார்கள். வெளிப்புற நடவடிக்கைகள் பிரிவினையை மட்டுமே ஏற்படுத்தும்.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடரில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கை தொடர்பாக இலங்கை அரசு சார்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கை அரசு கடந்த 11 மாதங்களில் அடைந்துள்ள முன்னேற்றங்கள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் ஊழல் ஒழிப்புக்கான உறுதிப்பாடுகள் குறித்து இந்த உரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

அதில்,

அரசியல் மற்றும் ஆட்சிமுறை மாற்றங்கள்

  • 2024 செப்டம்பர் ஜனாதிபதித் தேர்தலிலும், அதைத் தொடர்ந்து நவம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு மக்கள் அமோக ஆதரவை வழங்கினர்.
  • வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள மக்கள் ஒரு கட்சிக்கு இவ்வளவு ஆதரவு வழங்கியது இலங்கையின் வரலாற்றில் இதுவே முதல் முறை.
  • பல்வேறு சமூகத்தினரையும், சாதனை படைத்த எண்ணிக்கையிலான பெண்களையும் உள்ளடக்கிய இலங்கையின் வரலாற்றிலேயே மிகச் சிறந்த நாடாளுமன்றம் இது. முதன்முறையாக, மலையக சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண் உறுப்பினர்களும், ஒரு கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளியும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
  • பல ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. எந்தவித வன்முறைச் சம்பவங்களும், அரச வளங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்ட நிகழ்வுகளும் இல்லாமல் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெற்றன.

பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றங்கள்

  • அரசு பொறுப்பேற்றபோது நாடு எதிர்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முன்னுரிமை அளித்து, சமூக பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்கள் மூலம் பொருளாதார சவால்கள் குறைக்கப்பட்டன.
  • விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய துறைகளுக்கு சிறப்பு நிவாரணங்கள் வழங்கப்பட்டன.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளுக்கு வரலாற்றுபூர்வமான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

  • வறுமையில் வாடுவோர், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் போன்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதற்காக சமூக நலன்புரி நிதி அதிகரிக்கப்பட்டது.
  • மீள்குடியேற்ற தேவைகளைப் பூர்த்தி செய்யவும், வீட்டுத் திட்டங்களை விரைவுபடுத்தவும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவும் ரூ. 1500 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள்

  • பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்குப் பதிலாக புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உருவாக்குவதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் இந்த மாதமே வர்த்தமானியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இணையவழி பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் போன்ற உள்நாட்டு நல்லிணக்க பொறிமுறைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
  • காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திற்கு ரூ. 375 மில்லியன் மேலதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
  • செம்மணி மனிதப் புதைகுழி உட்பட பல்வேறு புதைகுழிகள் குறித்து சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
  • பொலிஸ் துறையின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டு, ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் போன்ற பல நீண்டகால வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்படுகின்றன.
  • பெரும்பாலான தனியார் காணிகள் உரிமையாளர்களிடம் விடுவிக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்புக்கு அத்தியாவசியமான காணிகள் மட்டுமே அரசு கட்டுப்பாட்டில் வைக்கப்படும், அதற்கான உரிய இழப்பீடு வழங்கப்படும்.
  • மோதல்களில் உயிரிழந்தோரை நினைவு கூரும் உரிமைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது, இதனால் இந்த ஆண்டு பல இடங்களில் நினைவு நிகழ்வுகள் சுதந்திரமாக நடத்தப்பட்டன.
  • சிவில் சமூக அமைப்புகளுக்கு சுதந்திரமாக செயற்பட ஏற்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

ஊழல் ஒழிப்பு மற்றும் சீர்திருத்தங்கள்

  • கடந்த சில மாதங்களில், ஊழல் ஒழிப்புக்கு வலுவான புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. சமூக நிலை எதுவாக இருந்தாலும், அரசியல் தலையீடு இல்லாமல், குற்றச்சாட்டுகள் குறித்த சுதந்திரமான விசாரணைகள் மற்றும் வழக்குகள் தொடரப்பட்டு பல முக்கிய தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
  • இந்த ஆண்டின் தொடக்கத்தில், புதிய அரசியல் கலாசாரம் மற்றும் நெறிமுறை சார்ந்த நல்லாட்சியை ஊக்குவிக்கும் நோக்கில் ‘தூய இலங்கை’ என்ற நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதியால் ஆரம்பிக்கப்பட்டது.
  • ஊழலற்ற இலங்கை ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்துக்கும், நலனுக்கும் இன்றியமையாதது என அரசு உறுதியாக நம்புகின்றது.

அத்துடன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பினர்கள், பார்வையாளர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களும் இலங்கை அரசுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றும், அதன் முயற்சிகளைப் புரிந்து கொண்டு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் இலங்கை கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களைப் பயன்படுத்திக்கொண்டு, உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் அனைத்து இலங்கை மக்களின் உரிமைகளையும் மேம்படுத்த வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் இறையாண்மைக்கு முக்கியத்துவம் அளிப்பதையும், வெளிநாட்டுத் தலையீடுகளை நிராகரிப்பதையும், உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை அடைய முடியும் என இலங்கை நம்புகின்றது.

  • மேற்குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் விஜித் ஹேரத் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

போக்குவரத்து சட்டம் கடுமையாக்கப்படுகிறது!

போக்குவரத்து சட்டம் நேற்று முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இதற்காக வாகனங்களை...

ரணில் – சஜித் அணிகள் இணைந்து செயற்பட முடிவு – வஜிர அபேவர்தன தெரிவிப்பு!

ஆரம்பப் பேச்சுகளின் போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கமைய ஐக்கிய தேசியக் கட்சியானது, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும்...

தேவைப்பட்டால் உரிய நேரத்தில் நாடாளுமன்றம் வருவார் ரணில் – ஐக்கிய தேசியக் கட்சி அதிரடி அறிவிப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தேவைப்பட்டால் சரியான நேரத்தில் நாடாளுமன்றத்துக்குள் நுழைவார் என்று...