இலங்கையில் உள்ள பாடசாலைகளில், உயர் தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களில் 24 சதவீதமானோர் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை சிறுவர் மற்றும் இளம் பருவத்தினர் தொடர்பான மனநல மருத்துவ நிபுணர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் மியுரு சந்திரதாச தெரிவித்தார்.
ஒவ்வொரு 10 மாணவர்களில் 6 பேர் அதாவது 60 சதவீத மாணவர்கள் ஏதோ ஒரு வகையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழகமும், மோனாஷ் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
கல்வி தொடர்பாக மாணவர்கள் மீதான அழுத்தம், பெற்றோருடனான பிரச்சினைகள், சமூக ஊடகங்களுக்கு அதிகமாக வெளிப்படுவது மற்றும் உடல் மற்றும் மன அழுத்தம் ஆகியவை இந்த மன அழுத்தத்திற்கான காரணம் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக பேராசிரியர் தெரிவித்தார்.
மேலும், இலங்கையின் 19 சதவீத மக்கள் மன அழுத்தத்தின் அறிகுறிகளில் உள்ளதாகவும் பேராசிரியர் இதன்போது தெரிவித்தார்.
அத்தோடு, இரவில் 7-8 மணிநேர நல்ல தூக்கத்தைப் பெறுதல், மின்னணுத் திரைகளைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துதல், மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டைத் தவிர்ப்பது, வீட்டு வன்முறையைத் தடுப்பது மற்றும் தினசரி இலக்கை நோக்கிச் செயல்படுவது ஆகியவற்றை இதற்கான உத்திகளாக அறிமுகப்படுத்தலாம் என்று பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.
Leave a comment