இந்தியாவானது இலங்கைக்கு நிபந்தனையற்ற உதவிகளையே வழங்கி வருகின்றது எனவும், செய்யும் உதவிகளுக்குப் பதிலுக்கு நாங்கள் எதையும் கேட்பதில்லை எனவும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தை வளர்ப்பதிலும், இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் நீடித்த உறவுகளை உருவாக்குவதிலும் இலங்கையின் உதவி மட்டுமே எங்களுக்குத் தேவையாகும் எனவும் அவர் கூறினார்.
இலங்கை வந்துள்ள இந்திய பெரு நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளுக்கான வரவேற்பு நிகழ்வு கொழும்பு ஐ.டி.சி. ரத்னதீப ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்காண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாங்கள் இலங்கைக்கு மிக ஆழமாக அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த 13 அல்லது 14 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு மடங்குக்கும் அதிகமாக உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
2022இல் நாங்கள் இலங்கைக்கு வழங்கிய அவசரகால உதவியின்போது வழங்கப்பட்ட கடன்களுக்கான மறுசீரமைப்பு இம்பெற்றுள்ளது. இதன் மூலம் இந்தியா இலங்கையின் மிகவும் நம்பகமான நண்பராகவும், மிகவும் நம்பத்தகுந்த பங்காளியாகவும் உள்ளது என்பதைத் தெரிவிக்கிறோம்.
இந்த நன்மைகள் இலங்கைக்கு அதிகமாக இருந்தாலும் நாங்கள் பொருட்படுத்தமாட்டோம், ஏனென்றால் இலங்கை எமது சகோதர நாடு, இன்று நாம் இதுவரை கண்டிராத மிகச் சிறந்த உறவைக் கொண்டிருக்கின்றோம்.” – என்றார்.
Leave a comment