ஜெனிவா மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத் தொடரில் பிரித்தானியா, கனடா, வடக்கு மாசிடோனியா, மலாவி மற்றும் மொண்டெனேகுரோ உள்ளிட்ட நாடுகளின் அனுசரனையுடன் இலங்கை குறித்து தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள நிலையில், இந்த விடயம் குறித்து பன்னாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து கலந்துரையாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழு ஜெனிவாவுக்கு செல்லவும், தீர்மானத்தை முன்வைக்க உள்ள நாடுகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மனித உரிமைகளை பாதுகாப்பதிலும் கடந்தகால விடயங்களில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதிலும் முழு அளவிலான ஈடுப்பாடுடன் அரசாங்கம் செயல்படுகிறது.
ஆகவே இலங்கைக்கு எதிராக எந்தவொரு நாடும் ஜெனிவாவில் கொண்டுவரக்கூடிய தீர்மானங்களை வலுவாக எதிர்கொள்ள முடியும் என்பதுடன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் வழங்கிய உத்தரவாதத்தின் பிரகாரம் செப்டெம்பரில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத்தொடர் இலங்கைக்கு சாதகமாகவே அமையும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள பன்னாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான மீளாய்வு கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. பிரித்தானியா மற்றும் கனடா உள்ளிட்ட சில நாடுகள் இந்த தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்க உள்ளது.
இருப்பினும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இலங்கைக்கு விஜயம் செய்து நேரடியாக நிலைமைகளை ஆராய்ந்து சென்றுள்ளார்.
அவர் வழங்கிய உத்தரவாதத்தின் பிரகாரம் செப்டெம்பரில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் இலங்கைக்கு சாதகமாகவே அமையும். மேலும் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசாங்கம் நேர்மையாக செயல்படுகிறது என தெரிவித்தார்.
எவ்வாறாயினும் கடந்தகால மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் விடயத்தில் நிலவிவரும் அதிருப்தியை அடுத்து, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வு கூட்டத் தொடரில், இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக் கூறலை மையப்படுத்திய புதிய தீர்மானம் ஒன்றை முன்வைக்க சர்வதேச நாடுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்த நடவடிக்கையானது, இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்த சர்வதேச கண்காணிப்பையும், அழுத்தத்தையும் மீண்டும் அதிகரித்துள்ளது.
இந்த புதிய தீர்மானத்தை பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ, மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இலங்கைக்கான கேந்திரிய குழு (Core Group on Sri Lanka) முன்வைக்கவுள்ளது. கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட 46/1 மற்றும் 51/1 போன்ற தீர்மானங்களின் தொடர்ச்சியாகவே இது அமைய உள்ளது.
குறிப்பாக, 51/1 தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்து, பகுப்பாய்வு செய்து, பாதுகாக்கும் ‘இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டம்’ (Sri Lanka Accountability Project) என்ற பொறிமுறையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதே இந்த புதிய தீர்மானத்தின் பிரதான நோக்கமாக இருக்கும் என இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதும், எதிர்காலத்தில் இத்தகைய மீறல்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதும் இதன் முக்கிய இலக்குகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment