பருத்தித்துறை நகர சபை எல்லைக்குள் காணப்படும் இராணுவ முகாம்களை அகற்றுமாறு வலியுறுத்தி பருத்தித்துறையில் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
‘பருத்தித்துறை நகரைப் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் பருத்தித்துறை நகரில் உள்ள சில இராணுவ முகாம்களை அகற்றுமாறு வலியுறுத்தி பருத்தித்துறை நகர பிதா டக்ளஸ் போல் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.
பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் அமைந்துள் இராணுவ முகாம், வெளிச்சவீட்டை ஆக்கிரமித்து அமைந்துள்ள கடற்படை முகாம் என்பன போருக்குப் பின்னரான நகரின் வளர்ச்சிக்குப் பாரிய தடைக்கற்களாக உள்ளன.
பருத்தித்துறை நகரின் வளர்ச்சி கருதியும் பருத்தித்துறை வாழ் மக்களின் நன்மை கருதியும் மேற்குறித்த இராணுவ, கடற்படை முகாம்களை அகற்றித் தருமாறு வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.
பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் காலை 8.30 மணியளவில் ஆரம்பித்த பேரணி பருத்தித்துறை நகர் வழியாக பிரதான வீதி ஊடாகப் பயணித்து பருத்தித்துறை பிர்தேச செயலகத்தைச் சென்றடைந்தது.
அங்கு காணி விடுவிப்பு, இராணுவ வெளியேற்றம் என்பன் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனாதிபதிக்கான மகஜர் பருத்தித்துறை பதில் பிரதேச செயலாளர் பசுபதி தயானந்தனிடம் கையளிக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தின்போது, “எமது நிலம் எமக்கு வேண்டும் இராணுவமே வெளியேறு, வெளிச்ச வீடு எங்கள் சொத்து இராணுவமே வெளியேறு, நீதிமன்றம் எங்கள் சொத்து இராணுவமே வெளியேறு, எமது வளமும் வாழ்வும் எமக்கே கொடுத்துவிடு, நகரின் இதயப் பகுதியில் ஏன் இராணுவ முகாம்?, தபால் நிலையம் எங்கள் சொத்து இராணுவமே வெளியேறு, பருத்தி நகரைப் பாதுகாப்போம், பருத்தித்துறை எங்கள் உயிர் மூச்சு, நீதிமன்றத்தை இடமாற்றாதே, வடமராட்சியின் தலைநகர் பருத்தித்துறை” உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களும் எழுப்பப்பட்டன.
பருத்தித்துறை நகர பிதா டக்ளஸ் போல் தலைமையில் நகர சபை உறுப்பினர்கள், கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் சுரேந்திரன் தலைமையில் பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வராசா கஜேந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், மு.சந்திரகுமார் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சு.சுகிர்தன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் நிரோஷ், வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன், தமிழ்த் தேசியப் பேரவை, தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளின் பிரமுகர்கள் ஆகியோருடன் பருத்தித்துறை நகர் வர்த்தகர்கள், மரக்கறி வியாபாரிகள், கடற்றொழிலாளர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
இந்தப் போராட்டத்தை முன்னிட்டு இன்று காலை பருத்தித்துறை நகரில் வர்த்தக நிலையங்கள், மரக்கறி சந்தை என்பன மூடப்பட்டு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.
பருத்தித்துறை நகர சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியப் பேரவை, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, இலங்கைத் தமிழரசுக் கட்சி, சுயேச்சைக் குழு, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவை வழங்கியிருந்த நிலையில், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஆதரவை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.









Leave a comment