“இலங்கையில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பிரச்சினை ரணில் விக்கிரமசிங்க என்ற தனிநபருடன் மாத்திரம் தொடர்புடையதல்ல. இன்று அவருக்கு ஏற்பட்டுள்ள நிலைமை நாளை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் ஏற்படலாம். இது அரசியல் பழிவாங்கல் என்பதை உணர்ந்து கொண்டுள்ளமையால்தான் மக்கள் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருக்கின்றனர்.” – இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்கிழமை கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மையல்ல என நீரூபிக்கப்பட்டால் அரசின் நிலைமை என்ன? இன்று ரணில் விக்கிரமசிங்கவுக்கு இடம்பெற்றுள்ள இந்த நிலைமை நாளை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் ஏற்படலாம்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தற்போது எந்தவொரு தனிப்பட்ட விஜயமும் செய்வதில்லையா?
அவர் என்று ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுகின்றாரோ அதன் பின்னர் மேற்கொள்ளும் விஜயமே தனிப்பட்ட விஜயமாகக் கருதப்படும். எமக்கிடையிலான அரசியல் கருத்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் அவ்வாறே உள்ளன. அவற்றில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆனால், இன்று நாம் கூடியிருப்பது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்துக்காகும்.
குறிப்பாக இந்தப் பிரச்சினை ரணில் விக்கிரமசிங்க என்ற தனிநபருக்கானதல்ல. இதனை அனைவரும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பாரிய தவறிழைத்திருக்கின்றனர். அரசு அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுவதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். எனவேதான் மக்கள் இன்று நீதிமன்ற வளாகத்தில் கூடியிருக்கின்றனர்.
சட்டம் நடைமுறைப்படுத்தப்பட முன்னர் அது தொடர்பில் சமூக வலைத்தளத்தில் நபர் ஒருவர் ஸ்திரமாகக் கருத்து வெளியிடுவாரெனில் நாட்டில் சட்டத்தின் ஆட்சி எந்த நிலைமையில் இருக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இவ்வாறான நிலைமை தொடர்ந்தால் நாட்டில் அராஜக நிலைமை ஏற்படும்.” – என்றார்.
Leave a comment