2023 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி, பிரதமர, சபாநாயகர் உட்பட ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்களில் ஒருசிலர் 2025 ஆம் ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளனர்.
அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ஆகியோரின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய வெளிப்படுத்தல்கள் தொடர்பில் சமூக கட்டமைப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி, பிரதமர் உட்பட ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் பிரகாரம் அரசியல்வாதிகள் தமது சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்த வேண்டும்.இந்த விபரங்களை இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தனது உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
இதற்கமைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சொத்து மற்றும் பொறுப்புகள் பற்றிய விபரங்களுக்கமைய ஜனாதிபதியிடம் நிலையான சொத்து விபரத்தின் கீழ் 20 பேச்சர்ஸ் காணி மற்றும் வீடு; காணப்படுகின்ற நிலையில் அதன் மொத்த பெறுமதி 40 மில்லியன் ரூபாவாகும்.11இலட்சத்து 25 ஆயிரம் பெறுமதியான தங்க ஆபரணங்கள் ஜனாதிபதியிடம்,அவரது குடும்பத்தாரிடமும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதியிடம் 15 மில்லியன் ரூபா பெறுமதியான டொயோடா வாகனம் ஒன்றும்,ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தாரின் மூன்று வங்கி கணக்குகளில் 13 இலட்சத்து 77435 ரூபா வைப்பில் உள்ளதாகவும் ஜனாதிபதியின் சொத்துக்களின் மொத்த பெறுமதி 57,502,435 ரூபா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களில் வீடு மற்றும் காணியின் பெறுமதி 10,555,615 ரூபா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தங்க ஆபணரங்களின் பெறுமதி 70 இலட்சம் ரூபாவாகவும்,வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் 6,842,604 ரூபா முதலீடு செய்துள்ளதாகவும், வங்கி கணக்கில் 4,082,302 ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய பிரதமரின் சொத்துக்களின் மொத்த பெறுமதி 27,000,000 ரூபா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தன்னிடம் வாகனங்கள் ஏதும் இல்லை என்று பிரதமர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரத்தில் காணி மற்றும் வீட்டின் பெறுமதி 70,000,000 ரூபா, தங்க ஆபரணங்களின் பெறுமதி 3,358,800 ரூபா,7,000,000 பெறுமதி வாகனம், 4500 அவுஸ்ரேலிய டொலர் பெறுமதியான வாகனம், வங்கி கணக்கில் 3,100,214 ரூபா, கொமன்வெல்த் வங்கியில் 42.20 அவுஸ்ரேலிய டொலர் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், சொத்துக்களின் மொத்த பெறுமதி 83,459,014 ரூபா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரத்தில் அவரிடம் 20 பேச்சர்ஸூடன் 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீடு ஒன்று இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் பிமல் ரத்நாயக்க மற்றும் அவரது குடும்பத்தாரிடம் 13 இலட்சத்து 10,000 ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களும்,15 மில்லியன் பெறுமதியான மோட்டார் கார் ஒன்றும்,10 வங்கிக் கணக்குகளில் 2,745,794 ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மொத்த பெறுமதி 25,000,000 ரூபா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர் விஜித்த ஹேரத்தின் சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரத்தில் காணி மற்றும் வீட்டின் பெறுமதி 10,007,000 ரூபா, 27,000,000 ரூபா பெறுமதியான மோட்டார் வாகனம்,வங்கி கணக்கில் 575,276 ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், அவரது சொத்துக்களின் மொத்த பெறுமதி 37,582,276 ரூபா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரத்தில் காணி மற்றும் வீட்டின் பெறுமதி 55,000,000 ரூபா, தங்க ஆபணரங்களின் பெறுமதி 3,100,000 ரூபா,வாகனத்தின் பெறுமதி 21,300,000ரூபா, வங்கி கணக்குகளில் 4,768,750 ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் அவரது சொத்துக்களின் மொத்த பெறுமதி 84,168,750 ரூபா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர் வசந்த சமரசிங்கவின் சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரத்தில் 235,000,000 பெறுமதியான வாணிப கட்டிடம், 10,000,000 பெறுமதியான காணி மற்றும் வீடு. 6,500,000 பெறுமதியான சோலா கட்டமைப்பு, 4,550,000 பெறுமதியான தங்க ஆபரணங்கள், 15,000,000 பெறுமதியான வாகனம், வங்கி கணக்கில் 3,153,850 ரூபா, எல்.ஓ.எல்.சி நிறுவனத்தில் 21,000 பங்குகள் (பெறுமதி குறிப்பிடப்படவில்லை), வருடாந்த வருமானம் 15,300,000, டிஜிட்டல் நாணயம் 3000 அமெரிக்க டொலர் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவின் சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரத்தில் 76,000,000 பெறுமதியான காணி மற்றும் இடம், வருடாந்த வருமானம் 9,678,185, வங்கி கணக்குகளில் 21,933,367 ரூபா உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.தங்க ஆபரணங்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பான விபரங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை.
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 2025 ஆம் ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரங்களை ஆணைக்குழுவுக்கு நேற்று புதன்கிழமை (17) சமர்ப்பிக்கவில்லை.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரத்தில் 5,500,000 பெறுமதியான காணி மற்றும் வீடு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு சொகுசு மோட்டார் வாகனங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையிலும், அதன் பெறுமதி குறிப்பிடப்படவில்லை.அத்துடன் 39,000,000 ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்துள்ளதாகவும்,வங்கி கணக்குகளில் 124,000,000 ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் சொத்துக்களின் மொத்த பெறுமதி 168,500,500 ரூபா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரத்தில் 268,000,000 பெறுமதியான காணி மற்றும் வீடு, 22,000,000 பெறுமதியான வாகனங்கள், 14,000,000 பெறுமதியான தங்க ஆபரணங்கள் இருப்பதாகவும் வங்கி கணக்குகளில் 7,500,000 ரூபா வைத்திலிடப்பட்டுள்ளதாகவும், சொத்துக்களின் மொத்த பெறுமதி 311,500,500 ரூபா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரத்தில் 662,000,000 பெறுமதியான காணி மற்றும் வீடு, 129,200,000 பெறுமதியான வாகனங்கள் இருப்பதாகவும், நிதி சொத்துக்களாக 141,941 அமெரிக்க டொலர்களும், 2038 பிரித்தானிய பவுன்ஸ் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a comment