இனப் பிரச்னைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு இன்னமும் வராமல் இருப்பது குறித்து இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா கடும் அதிருப்தியும் விசனமும் வெளியிட்டுள்ளார்.
கொழும்பு தமிழ் பத்திரிகைகளின் ஆசிரியர்களை அழைத்து சமகால
நிலவரம் தொடர்பில் தூதுவர் கடந்த வாரம் கலந்துரையாடினார்.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அத்துடன், தான் உயர்ஸ்தானிகராக பதவியேற்ற உடனேயே தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை அழைத்து பேசினார் என்றும் அப்போது அவர்களிடம் ஐக்கியப்பட்டு செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியதுடன் அரசியல் தீர்வு தொடர்பில் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் என்றும் தெரிவித்தார்.
எனினும், இந்த சந்திப்பு நடந்து இரு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்த யோசனை ஒன்றை இது வரை தம்மிடம் முன் வைக்கவில்லை என்று
பத்திரிகை ஆசிரியர்களிடம் தூதுவர் கூறினார்.
இந்தியாவை பொறுத்தவரை, அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி மாகாண சபைகள் தேர்தலை நடத்த அர்த்தபுஷ்டியான அதிகாரப் பரவலாக்கலுக்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை
தொடர்ந்து வலியுறுத்துவோம்.
மிகவும் அண்மையில், இந்த நிலைப்பாட்டையே ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் இந்திய பிரதிநிதி வலியுறுத்தினார் என்றும் தூதுவர் குறிப்பிட்டார்.
2024 டிசெம்பரில் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க புதுடில்லிக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ பயணத்தின் போதும் கடந்த ஏப்ரலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொழும்புக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ பயணத்தின்போதும் வெளியிடப்பட்ட இரு நாடுகளினதும் கூட்டறிக்கைகளில் 13ஆவது திருத்தம் பற்றி பிரத்தியேகமாக குறிப்பிடப்படாமல் அரசமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பொதுவில் கூறப்பட்டிருந்தமை குறித்து பத்திரிகை ஆசிரியர்கள் சிலர் சுட்டிக் காட்டியபோது, ‘அரசமைப்பை நடைமுறைப்படுத்துமாறு இந்தியா கூறும்போது எதை மனதில் கொண்டு கூறுகிறோம் என்பதை இலங்கை அரசாங்கம் புரிந்துகொள்ளும்’, என்று சந்தோஷ் ஜா பதிலளித்தார்.
தமிழ்க் கட்சிகளின் போக்குகள் குறித்து கருத்து தெரிவித்தபோது,
‘அவை தங்களை தாங்களே தலையில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்வது போன்று நடந்து கொள்கின்றன’, என்று தனது கையை தலையில் வைத்து குறிப்பாக அவர் சொன்னார்.
மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்கள் தங்களை மலையகத் தமிழர்கள் என்று அடையாளப்படுத்த விரும்புகிறார்கள் என்றும் அது குறித்து இந்தியாவின் கருத்து என்ன என்று ஒரு பத்திரிகை ஆசிரியர் கேட்டார்.
அதற்கு பதிலளித்த சந்தோஷ் ஜா தங்களைப் பொறுத்தவரை அந்த மக்கள் இந்திய வம்சாவளியினரே என்றும் அவர்கள் தங்களை எவ்வாறு அழைக்க விரும்புகிறார்கள் என்பதைப் பற்றி இந்தியா அபிப்பிராயம் சொல்வதற்கில்லை எனவும் கூறினார்.
அடுத்த வருடம் அரசாங்கம் மாகாண சபைகள் தேர்தலை நடத்தும் என்ற நம்பிக்கை இருப்பதாக இந்தியத் தூதுவர் வெளியிட்ட கருத்துகள் அறி குறி காட்டவில்லை.
Leave a comment