அரசியலமைப்பு சபையில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இராஜினாமா செய்ய வேண்டும் என்று பணிப்புரை வழங்குவதென இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தாயகம் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
அரசாங்கம் எல்லைமீள் நிர்ணயம் செய்த பின்னர் தான் மாகாணசபை தேர்தல் என்று கூறுவதை நாம் ஏற்கமுடியாது. தேர்தல் முறை மறுசீரமைப்பு என்பது ஒரு விடயம். ஆனால் மறுசீரமைப்பு செய்யப்படவில்லை என்பதற்காக தேர்தலே நடத்தாமல் இருப்பது ஏற்க முடியாத ஒரு விடயம். அதனை அரசுக்கு சொல்லியிருக்கிறோம்.
அப்படி பார்த்தால் கடந்த இரு பாராளுமன்ற தேர்தல்கள் நடத்தியிருக்க முடியாது. எனவே தேர்தலை உரிய காலத்தில் நடாத்துவது அடிப்படையான விடயம். அரசானது தேர்தலுக்கு முகம் கொடுக்க பயந்துகொண்டு மாகாண சபை தேர்தலை காலவரையின்றி பிற்போட்டுக்கொண்டிருப்பதாக தெரிகின்றது. முடிந்தால்மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துங்கள் என்று பகிரங்கமாக சவால் விடுக்கின்றோம். வடக்குகிழக்கில் அரசின் செல்வாக்கு பாரிய அளவு சரிவடைந்துள்ளது. மக்கள் தெளிவடைந்துள்ளனர். அதனை நடத்தினால் மண் கௌவ்வுவீர்கள் என சவாலாக சொல்லு கொள்கிறோம்.
அத்துடன் பயங்கரவாத தடுப்புச்சட்டம் முற்றுமுழு தாக நீக்கப்படவேண்டும். மாற்றீடாக எந்த சட்டமும் தேவையில்லை என்று எங்களை விட தீவிரமாக இருந்தவர்கள் இந்த ஜே.வி.பியினர். கடந்த காலங்களில் மாற்று வரைவுகள் வந்தபோது இவர்கள் அந்த கூட்டங்களுக்கே வரமாட்டார்கள். அதனை நீக்குமாறு நாங்கள் நடத்திய போராட்டங்களில் ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் அவர்கள் சார்ந்த முக்கியமான ஒருவர் பங்கு கொண்டிருந்தார். எனவே ஆட்சிக்கு வந்தவுடன் இருப்பதைவிட மோசமான ஒரு வரைபு தற்போது வெளிவந்துள்ளது. பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாப்பதற்காகவாம் என்று கூறப்படுகின்றது. இது ஒரு நகைப்பிற்குரிய விடயம். அவ்வாறு எனில் மக்களை
பாதுகாப்பதற்காக இல்லை. இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அதில் உள்ள விடயங்கள் தொடர்பாக கட்சி சில கலந்துரையாடல்களை நடத்தும்.அந்த வரைவை முற்றாக எதிர்க்கிறோம். அத்துடன் தேசிய ரீதியில் ஒரு குற்றச்சாட்டு ஒன்று
எமது பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் மீது முன்வைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சபையில் அரசுடன் இணைந்து அனைத்திற்கும் வாக்களித்ததாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. விசேடமாக கணக்காளர் நாயகம் நியமனத்தில் ஒரு இராணுவ அதிகாரிக்கு சார்பாக வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இழப்பீட்டிற்கான அலுவலகத்திற்கும் இராணுவ அல்லது பாதுகாப்புத் தரப்பின் பின்புலத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு சிறிதரன் சார்பாக வாக்களித்தமை மட்டுமல்லாமல் அவர்களை தெரிவு செய்கின்ற நேர்முகப் பரீட்சையிலும் தேர்வு செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டுக்கள் இருந்தன.
அதனை அவர் மறுத்திருந்தார். ஆனால் அது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த இருவரையும் நியமிக்கக்கூடாது என்று கட்சி ஜனாதிபதிக்கு கடிதம் எழுத வேண்டும் என்று
தீர்மானிக்கப்பட்டு எழுதிவைத்திருந்தோம். எனவே அது ஒரு தர்மசங்கடமான நிலைமையை கட்சிக்கு ஏற்படுத்தியுள்ளது. இவர்களை நியமிக்கக்கூடாது என்று கட்சி கடிதம் எழுதியுள்ளது. ஆனால் கட்சியை சேர்ந்தவர் அவர்களை தெரிவு செய்துள்ளார்.
அத்துடன் அதற்கு முன்னரும் கூட இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நியமனம் தொடர்பாக மத்திய குழு கூட்டத்தில் அவரிடம் விளக்கம் கேட்டிருந்தோம். கூடிய புள்ளி எண்ணிக்கையை பெற்றவருக்கு அந்த பதவியை வழங்காமல் இரண்டாவதாக வந்தவருக்கு அரசாங்கம் கொடுத்தபோது அரசுடன் இணைந்து அவர் வாக்களித்ததாக சொல்லப்பட்டது. அதற்கான நியாயப்பாடுகளை கட்சிக் கூட்டத்தில் அவர் சொல்லியிருந்தார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பதவி தொடர்பான வாக்கெடுப்பிலும் அப்படி செயற்ப்பட்டதாக சொல்லப்பட்டிருந்தது.
கணக்காளர் நாயகம் விடயத்தில் மூன்று தடவைகள் அவ்வாறு நடந்துள்ளது. இறுதியாகவே அந்த இராணுவ அதிகாரியும், அதற்கு முன்பு ஜனாதிபதி தனது நெருங்கிய நண்பரையும் பின்னர் இரண்டாம் நிலையில் இருக்கும் ஒருவரையும் பரிந்துரை செய்திருந்தார்.
இருப்பினும் அந்த மூன்றும் நிறைவேறவில்லை. ஏனெனில் எதிர்கட்சி உறுப்பினர்கள் இருவரும் சிவில் சமூகத்தை சேர்ந்த மூவரும் சேர்ந்து அந்த பிரேரணைகளிற்கு எதிராக வாக்களித்திருந்தனர அவர்களுக்கு சார்பாக சிறிதரனின் வாக்கு உட்பட நான்கு வாக்குகள் கிடைத்தன. எனவே அரசுடன் இணைந்து இந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்டது தொடர்பான குற்றச்சாட்டு அவருக்கு இருந்தது.
ஏற்கனவே இது தொடர்பாக பாராளுமன்றில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரச்னையை எழுப்பியிருந்தார்.
Leave a comment