அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன் இருப்பதாகவும், அதற்காக இந்த ஆண்டு ரூ. 50,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
குருநாகல் மாவட்டத்தின் ரிதீகம, மாவதகம, மல்லவபிட்டிய, இப்பாகமுவ மற்றும் கணேவத்த பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஏற்பட்ட அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் மாலை ரிதீகம, தொடம்கஸ்லந்த இளைஞர் படையணி நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
அனர்த்தத்திற்குப் பிறகு நாடும் மக்களும் மிக விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாது என்று சிலர் கூறினாலும், தற்போது சேதமடைந்த அனைத்து வீதிகளையும் பொதுமக்களுக்கு மீண்டும் திறந்து, தொடர்பாடல், மின்சாரம் மற்றும் நீர் உள்ளிட்ட உட்கட்
டமைப்பு வசதிகளை மீட்டெடுத்து மீண்டும் கட்டியெழுப்பும் திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக இரவும் பகலும் உழைத்த அரச அதிகாரிகளின் பங்களிப்பை பாராட்டுவதாகவும், அந்த அனர்த்ததை எதிர்கொள்வதில் அரச பொறிமுறை நாட்டிற்கும் மக்களுக்கும் அதன் அர்ப்பணிப்பை நிரூபித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
அண்மைய காலங்களில் ஏற்பட்ட மிகப் பாரிய பேரழிவுகளில் ஒன்றை நாங்கள் சந்தித்தோம். நாடு விரைவாக மீள முடியாது என்று பலர் கூறினர். ஆனால் இப்போது அனர்த்தத்தால் சேதமடைந்த அனைத்து வீதிகளையும் மீண்டும் திறந்துள்ளோம்.
தொடர்பாடல், மின்சாரம், நீர் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
அதற்காக நமது அரசியல்வாதிகள், குறிப்பாக அரச அதிகாரிகள், கடுமையாக உழைத்தனர். இந்த நாட்டு மக்களுக்கு நமது அரச பொறிமுறை பற்றி நல்ல புரிதல் இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் இந்த அனர்த்தத்தின் போது, நமது அரச அதிகாரிகள் நாட்டிற்கும் மக்களுக்கும் எவ்வளவு அரப்பணிபபுடன் செயற்படுகிறார்கள்
என்பதை நிரூபித்தனர். பல அதிகாரிகள் இரவும் பகலும் உழைத்தனர். மக்களும் அதற்காக முன்வந்தனர். அந்த அர்ப்பணிப்பின் விளைவாக, நாங்கள் கணிசமான அளவிற்கு மீண்டு வந்துள்ளோம்.
ஆனால் இந்தப் பேரழிவு நமது பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். நமது நாட்டின் பொருளாதாரம் இதற்கு முன்பு ஒரு பாரிய நெருக்கடியைச் சந்தித்தது
என்பதை இங்குள்ள நாம் அனைவரும் அறிவோம். அந்த நெருக்கடியின் விளைவுகளை நாம் அனைவரும் எதிர்கொண்டோம். மின்சாரம், எரிபொருள், எரிவாயு, பால் மா போன்றவை கிடைக்கவில்லை. முழு நாடும் வீழ்ச்சியடைந்தது. அத்தகைய
பொருளாதார நெருக்கடி இயற்கை பேரழிவால் உருவாகவில்லை.
மேலும் இதுபோன்ற பொருளாதார வீழ்ச்சி கிராமங்களில் வசிக்கும் நமது தாய்மார்கள் மற்றும் தந்தையர்களின் தவறுகளினால் ஏற்பட்டது அல்ல. ஆட்சியில் இருந்த அரசியல் வாதிகளிடம் பரவலாக காணப்பட்ட ஊழல், இலஞ்சம், முறைகேடு மற்றும் தவறான முடிவெடுகளை எடுத்தல் போன்றவற்றால் நமது நாட்டு மக்கள் பெரும் துன்பத்தை
எதிர்கொண்டனர். அதைத் தொடர்ந்து நடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில், நாட்டு மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் எங்களை ஆட்சிக்கு தேர்ந்தெடுத்தனர். மக்களுக்கு பல எதிர்பார்ப்புகள் இருந்தன. மோசடி மற்றும் ஊழலற்ற
அரசாங்கம், ஊழல்வாதிகளையும் மோசடிக்காரர்களையும் தண்டித்தல், சட்டத்தின் ஆட்சியை நிறுவுதல் மற்றும் இளைஞர்களை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றுதல் அந்த இலக்குகளில் முக்கியமானவை ஆகும்.
அனைவரும் வாழ்வதற்கு போதுமான வருமான ஆதாரத்தை உருவாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே முக்கிய காரணியாக அமையும்.
அந்த இலக்கை நோக்கி நாம் ஏற்கனவே குறிப்பிடத்தக்க அளவு பணிகளைச் செய்து முடித்துள்ளோம்.
அப்படிப்பட்ட ஒரு நேரத்தில்தான் நாம் இப்படி ஒரு பேரழிவை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், அந்தப் பேரழிவை எதிர்கொண்ட மக்களின் வாழ்க்கையை முன்பை விட சிறப்பாக மீண்டும் கட்டியெழுப்ப நமக்கு வலிமை இருக்கிறது. அதற்காக இந்த ஆண்டு 50,000 கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளோம். பொருளாதாரத்தை வலுப்படுத்தினால் மட்டுமே அந்த வலிமை வரும்.
நமது கிராமங்களில் உள்ள மக்களின் வாழ்க்கை இதை விட சிறப்பாக இருக்க வேண்டும். சரியாக உணவு உண்ணாதவர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். தலைமுறை தலைமுறையாக நல்ல வீடு இல்லாதவர்கள் இருக்கிறார்கள்.
நம் நாட்டு மக்கள் இப்படி வாழக்கூடாது. 70-80 ஆண்டுகால வாழ்க்கையில் எல்லோரும் மனிதனாக வாழக்கூடிய ஒரு நாட்டை நாம் உருவாக்க வேண்டும்.
எனவே, இந்தப் பொருளாதாரத்தையும் மக்களைக் கவனித்துக் கொள்ளும் ஒரு நாட்டையும் கட்டியெழுப்புவதற்கு நாங்கள் மிகவும் திட்டமிட்ட முறையிலும் முறையாகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம். நாம் அதைச் செய்ய வேண்டும். நாம் அதைச் செய்யாவிட்டால், யாரும் அதைச்செய்ய மாட்டார்கள். கடந்த 76 ஆண்டுகளில் அதைச் செய்திருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை.
இந்த நாட்டில் மக்களைக் கவனித்துக் கொள்ளும் ஒரு அரசாங்கம் இருந்தால், அது இந்த அரசாங்கம்தான். அதனால் தான் பேரழிவை எதிர்கொண்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப 50,000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டன. இவ்வளவு பாரிய தொகை இதற்கு முன்பு ஒதுக்கப்பட்டதில்லை-என்றார்.
Leave a comment