‘காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, அதிகார பகிர்வு காணாமல் போனோர் பற்றிய பணிமனையின் மேம்பட்ட செயல்பாடு போன்றவை தொடர்பில் வடக்கு தமிழ் மக்களுக்கு வழங்கிய முக்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை’, என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில் மலையக தமிழ் சமூகம் நீண்டகாலமாக ஓரங்கட்டப்படுவதை டித்வா பேரிடர் வெளிப்படுத்தியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பிலுள்ள ஐ. நா. வதிவிட பிரதிநிதி மார்க் அந்த்ரே பிரான்ஸேயுடனான சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து கருத்துரைத்த மனோ கணேசன், ‘டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரிடர்களால் நாடு முழுவதும் 643 பேர் உயிரிழந்தனர். 183 பேர் காணாமல் போயினர் என்று அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவித்தாலும் பாதிக்கப்பட்ட மக்கள் தொகையின் விகிதாசாரத்தில் தோட்ட சமூகங்களை சேர்ந்த மக்களே அதிகளவில் உயிரிழந்தனர். இடம்பெயர்ந்த குடும்பங்கள் இன்னமும் தற்காலிக தங்குமிடங்களில் வாழ்கின்றன.
சிலர் பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
‘இது தற்செயலானது அல்ல. பல தசாப்தங்களாக தொடரும் புறக்கணிப்பு மற்றும் சமமற்ற அணுகுமுறையின் விளைவாகும். இது மலையக தமிழ் சமூகத்தின்மீதான அரசின் அக்கறையற்ற தன்மை மற்றும் பாரபட்சமான அணுகுமுறையை பிரதிபலிக்கிறது.
பாதிக்கப்பட்ட தோட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள், பாதுகாப்பான மீள்குடியேற்றம் வழங்க அரசியல் விருப்பம் இல்லாததே முக்கிய பிரச்னை. இது நிவாரணம் மட்டுமல்ல, சம குடியுரிமை – சம பாதுகாப்பு தொடர்பான விடயம் – என்றார்.
மேலும், ‘பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தை எதிர்த்த ஆளும் கட்சி இப்போது மிகவும் கடுமையான பொது பாதுகாப்பு கட்டமைப்பை அறிமுகப்படுத்த முயல்கிறது என்றும் குற்றஞச்சாட்டியதுடன், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, அதிகார பகிர்வு காணாமல் போனோர் பற்றிய பணிமனையின் மேம்பட்ட செயல்பாடு போன்றவை தொடர்பாக வடக்கு தமிழ்மக்களுக்கு வழங்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை’ என்றும் சுட்டிக்காட்டினார்.
Leave a comment