‘தமிழ்த் தேசியக் கட்சிகள் பிளவுபட்டு நிற்பதால் தமிழர்களுக்கான தீர்வுத் திட்டத்தின் முக்கியத்துவமும் மூடி மறைக்கப்பட்டு வருகின்றது.
எனவே, பொது வேலைத் திட்டத்தின் கீழ் வடக்கில் இருந்து ஒருமித்த குரல் அவசியம்.’ -இவ்வாறு ஐக்கிய சோஷலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய வலியுறுத்தினார்.
மாகாண சபைகள் தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறுஆளுங் கட்சிக்கான மக்கள் ஆதரவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
கூட்டுறவு தேர்தல்களில் கூட ஆளுங்கட்சிக்கு தோல்வி ஏற்பட்டு வருகின்றது. எனவே,
மாகாண சபைத் தேர்தலை இழுத்தடிப்பதற்கே அதிகார தரப்பு முற்படக்கூடும். அதற்கான ஆயுதமாக எல்லை நிர்ணய விடயம் பயன்படுத்தப்படலாம்.
எனினும், இந்தியா மற்றும் ஐ. நா.மனித உரிமைகள் பேரவை என்பன மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அழுத்தம் கொடுத்துவருகின்றன. இந்த அழுத்தத்தால் தேர்தல் நடத்தப்படுவதற்குரிய சாத்தியமும் உள்ளது. எது எப்படி இருந்தாலும் இவ்வருட இறுதிக்குள் அல்லது அடுத்த வருடம் ஆரம்பத்தில் தேர்தல் நடத்தப்பட்டாகவேண்டும்.
அதேவேளை, மகிந்த, ரணில் ஆட்சிகாலங்களின்போது, வடக்கில் அரசியல் பிரச்னை இல்லை என்ற விம்பம் உருவாக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையிலும் தமிழர்களுக்கான உரிமை சார்ந்த விடயங்களின் முக்கியத்துவம் மழுங்கிவருகின்றது.
தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கிடையிலான பிளவும் இதற்கு காரணம். பிளவுகள் இருந்தாலும் பொது வேலைத்திட்டத்தின் கீழ் வடக்கில் இருந்து ஒருமித்தகுரலொன்று அவசியம். அப்போதுதான் தீர்வுக்குரிய அழுத்தம் பிரயோகிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகும்.’ – என்றார்.
Leave a comment