அமெரிக்காவின் வரி, உலகளாவிய பொருளாதார அதிர்ச்சிகளில் இருந்து தற்காத்துக் கொள்ள ஆசிய நாடுகள் சுங்கமற்ற வர்த்தக தடைகளை குறைக்கவும் பிராந்திய வர்த்தக ஒருங்கிணைப்பை அதிகரிக்கவும் வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.
இந்த அறிவுரையானது, தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் பொருளாதார மீட்சித்திட்டத்தில் இருக் கும் இலங்கைக்கு மிக முக்கியமான ஒன்றாக அமைவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க – சீன வர்த்தக பதற்றங்களால் ஆசியா பாதிப்படைவதற்கு முக்கிய காரணமாக, ஆசிய பொருளாதார வளர்ச்சிக்கு வர்த்தகமே மையமாக இருப்பதுடன், அதன் விநியோகச்சங்கிலிக்கு சீனாவை நம்பியிருப்பதாகும் என்று ஆசிய பிராந்தியத்திற்கான தனது பொருளாதார அறிக்கையில் நாணய
நிதியம் குறிப்பிட்டுள்ளது.
பிராந்திய வர்த்தக ஒருங்கிணைப்பை அதிகரிப்பது, வெளிப்புற சவால்களுக்கு எதிரான காப்பீடாக செயல்படும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசியா மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
வர்த்தக தடைகளை நீக்குவதன் மூலம் ஆசிய நாடுகள் ஏற்றுமதிச் சந்தைகளைப் பல்வகைப்படுத்தவும் செலவுகளைக் குறைக்கவும், அமெரிக்க வரி விதிப்புகளின் தாக்கங்களை சமாளிக்கவும் முடியும். பிராந்திய வர்த்தக ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் மூலம் ஆசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடுத்தர
காலத்தில் 1.4 வீதம் வரை அதிகரிக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தற்போது நீடிக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்துள்ளது.
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதிப்படுத்த கட்டமைப்புச் சீர்திருத்தங்களை அமுல்படுத்த வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு உள்ளது.
இந்தச் சூழலில்,
வர்த்தக தடைகள் நீக்கப்படுவது பற்றிய நாணய நிதியத்தின் ஆலோசனை, இலங்கையின் சீர்திருத்த முயற்சிகளுக்கு நேரடியாகப் பொருந்துகிறது.
இலங்கையின் ஆடைத்துறை போன்ற முக்கிய ஏற்றுமதித் துறைகள் அமெரிக்காவின் வரிவிதிப்புகளால் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைப்படி, இலங்கை ஆசியப் பிராந்தியத்துடனான வர்த்தகத்தை வலுப்படுத்துவதும் புதிய சந்தைகளைக் கண்டுபிடிப்பதும் அத்தியாவசியமாகிறது.
Leave a comment