முத்துஐயன்கட்டு குளத்தில் இருந்து இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றோர் இராணுவ சிப்பாயும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் கைதான சிப்பாய்கள் நால்வரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நேற்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றது.
இதன்போது, சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட இராணுவத்தினர் மூவருடன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட சிப்பாயும் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கில் முன்னிலையான சட்டத்தரணிகள் எம்.ஏ.சுமந்திரன், கெங்காதரன், தனஞ்சயன் உள்ளிட்டவர்கள் கைதான இராணுவத்தினருக்கு பிணை வழங்கக்கூடாது என்று வலியுறுத்தினர்.
இந்த நிலையில் சிப்பாய்கள் நால்வரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
முல்லைத்தீவு – முத்துஐயன்கட்டு – ஜீவநகர் கிராமத்தில் அமைந்துள்ள இராணுவ முகாம் அகற்றப்பட்டு வரும் நிலையில் கடந்த 7ஆம் திகதி இரவு இராணுவத்தினர் அழைத்து இளைஞர்கள் ஐவர், அங்கு சென்றனர்.
இவ்வாறு சென்றவர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில், மூவர் குளத்தில் குதித்து தப்பி வந்தனர்.
ஒருவர் இராணுவத்தினரின் தாக்குதலில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார். இந்த நிலையில், காணாமல் போன இளைஞர் மறுநாள் காலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment