Home தாயகச் செய்திகள் மன்னாரில் காற்றாலை அமைப்பு ஒரு மாதத்துக்கு இடைநிறுத்தம்!அதன் பின்னர் அது நடக்குமாம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்முதன்மைச் செய்திகள்

மன்னாரில் காற்றாலை அமைப்பு ஒரு மாதத்துக்கு இடைநிறுத்தம்!அதன் பின்னர் அது நடக்குமாம்!

Share
Share

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்களை அமைக்கும் திட்டத்தை ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்தி வைப்பதுடன், அதற்குள் அந்தக் காற்றாலைத் திட்டம் தொடர்பாக அரசு நியமிக்கும் தரப்பினர் மன்னார் மக்களின் அபிப்பிராயங்களைப் பெறுவர் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆயினும், அதன் பின்னர் இதுவரை திட்டமிடப்பட்டு அங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள 70 மெகா வாற் மின் உற்பத்தித் திட்டம் அப்படியே முன்னெடுக்கப்படும். மன்னாரில் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்களை அமைக்கும் சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுவர் மற்றும் மன்னார் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தனர்.

அங்கேயே மேற்படி தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டன என அறியவந்தது.

மன்னார் தீவில், மக்கள் குடியிருப்புக்கள் உள்ள பகுதிக்குள் இத்தகைய காற்றாலைத் திட்டங்கள் தேவையில்லை என இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மன்னார் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளால் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டது.

அத்தோடு மன்னாரில் காற்றாலை அமைக்கும் திட்டத்துக்கு மன்னார் மக்கள் எதிரானவர்கள் அல்லர் எனவும், மன்னார் தீவுக்குள் – குடியிருப்புக்கள் உள்ள பகுதிக்குள் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்கள் அமைக்கும் செயற்பாட்டையே மன்னார் மக்கள் எதிர்க்கின்றனர் எனவும் ஜனாதிபதியிடம் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.

கடந்த கால இனவாத அரசுகள் இத்தகைய காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்களை அமைப்பதற்கான அமைச்சரவை அனுமதிகளை வழங்கியுள்ள போதும், கற்றாலை அமைப்பது தொடர்பில் மக்களின் கருத்துக்கள், ஆலோசனைகள் கேட்டறியப்படவில்லை எனவும் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

காற்றாலைத் திட்டம் தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்துவதுடன், இந்த விடயத்தில் மன்னார் மக்களின் அபிப்பிராயங்களும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டது.

மேலும் இதன்போது மன்னார் காற்றாலைத் திட்டத்தால் ஏற்படும் சிக்கல் மற்றும் பாதிப்பு நிலைமைகள் தொடர்பிலும் ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இதற்குப் பதில் அளித்துப் பேசிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, “இது தனித்து மன்னார் தீவுக்குரிய பிரச்சினை அல்ல. மின்சார விநியோகம் தேசிய பிரச்சினை. அதற்கான தீர்வின் அடிப்படையிலேயே விடயம் அணுகப்பட வேண்டும்.” – என்றார்.

மின் உற்பத்திக்கான நீர்த்தேக்கங்கள் உருவாக்கப்பட்ட போது பல கிராமங்கள், குடியிருப்புகள் நீரில் மூழ்கியமையை ஜனாதிபதி நினைவுபடுத்தினார்.

“தேசிய பிரச்சினைக்குத் தீர்வாக அந்தக் கிராமங்கள், குடியிருப்புகளின் பாதிப்பு தவிர்க்க முடியாததாயிற்று. எனினும் அந்த மக்களின் பிரச்சினைகளுக்கு அப்போது மாற்று வழிகளில் தீர்வுகள், நிவாரணங்கள், ஒழுங்குகள் செய்து கொடுகப்பட்டன.” – என்றும் ஜனாதிபதி விளக்கினார்.

“இப்போதும் இதுவரை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட்டேயாக வேண்டும். அவற்றை நிறுத்தினால் பெரும் நெருக்கடிகள் வரும். 2028 இல் உரிய மின் உற்பத்தி இல்லாமல் நாடு தழுவிய மின்வெட்டு வரக்கூடிய ஆபத்து உண்டு. ஆகையால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்ட திட்டங்களுக்கு ஒத்துழையுங்கள். அவற்றை அமைப்பதால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து எனது பிரதிநிதிகள் குழு மூலம் விரிவாக அறிந்து கொள்வேன். பிரச்சினைகளுக்கு உரிய தீர்வையும் பெற்றுத் தருவேன்.

மக்களின் பிரச்சினைகளை செவிமடுத்து ஆராய்வதற்காக இந்தத் திட்டத்தை ஒரு மாத காலத்துக்கு நிறுத்தலாம். அச்சமயத்தில் உரிய பிரதிநிதிகள் மூலம் பிரதேச மக்களின் பிரச்சினைகள், கருத்துக்கள் உள்வாங்கப்படும்.

அவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை உடனடியாக முன்னெடுப்போம். ஆகவே, திட்டமிட்டு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்ட ஏற்பாடுகளை நிறுத்த முயற்சிக்க வேண்டாம்.

இனிமேல் புதிய திட்டங்களை மன்னார் தீவைத் தவிர்த்து வெளியில் ஆலோசிக்கலாம்.” – என்றார் ஜனாதிபதி.

மன்னார் தீவுக்குள் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள், பாதிப்புகள், பின்னடைவுகள், பிரச்சினைகள் பற்றி மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் மிக விரிவாகவும் விளக்கமாகவும் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்தார்.

இந்தச் சந்திப்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், ரிஷாத் பதியுதீன், உபாலி சமரசிங்க, மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இந்தியக் கடற்பரப்பில் இலங்கையர் இருவர் கைது – யாழ். மாவட்டப் பதிவு இலக்கம் கொண்ட படகும் சிக்கியது!

இந்தியக் கடற்பகுதியில் நின்ற படகில் இருந்த இரண்டு இலங்கையரை இந்தியப் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம்...

ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு  நாம் சதி செய்யவில்லை – எதிரணி தெரிவிப்பு!

“ஆட்சியைக் கவிழ்ப்பதற்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எவ்வித சூழ்ச்சியும் செய்யவில்லை” – என்று...

சித்துபாத்தி ஸ்கான் ஆய்வு அறிக்கை இன்று நீதிமன்றுக்கு!

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஸ்கான் ஆய்வு தொடர்பான...

எம்.வி.சன்சியின் 15 ஆண்டு நிறைவை ஒட்டி பொது அறிவுப் போட்டி!

எம்.வி.சன்சி 15 ஆவது வருட நிறைவினையொட்டி நடாத்தப்படும் பொது அறிவுப்போட்டிக்கான பதிவுகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கனடாவில்...