யாழ்ப்பாண மாவட்டத்தில், மலேரியா நோயாளர்கள் இருவர் இனங்காணப் பட்டுள்ளதாகவும், ஆபிரிக்க மற்றும் தென் அமெரிக்க கண்டங்களுக்கு
செல்லும் மக்கள், மலேரியா ஏற்படாத முறையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையில், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பல வருடங்களாக, மலேரியா அதிக பரம்பல் உள்ள நாடுகளுக்குச் சென்று நாடு திரும்பியோர் மத்தியில், மலேரியா நோய் இனங்காணப்பட்டுள்ளது.
இலங்கையில், 2021 இல் 26 பேரும், 2022 இல் 37 பேரும், 2023 இல் 62 பேரும், 2024 இல் 38 பேரும், 2025 இல் 29 பேரும் என நாடு திரும்பியோர் மலேரியா நோயுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.
அவ்வாறே, யாழ்ப்பாண மாவட்டத்திலும், 2021 இல் 2 பேரும், 2022 இல் 7 பேரும், 2023 இல் 6 பேரும், 2024 இல் 2 பேரும், 2025 இன் இதுவரையான காலப் பகுதியில் 5 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்த வாரம், யாழ்ப்பாண மாவட்டத்தில், கடந்த வருடம் செப்ரெம்பர் மாதம் டோகா சென்று, கடந்த 30 ஆம் திகதி நாடு திரும்பிய 2 நோயாளர்கள் இடையே மலேரியா நோய் இனங்காணப்பட்டுள்ளது.
எனவே, எமது நாட்டில் மலேரியா நோயின் உள்ளுர் பரம்பல் முற்றாக ஒழிக்கப்பட்டாலும், மலேரியா நோயைப் பரப்புகின்ற நுளம்புகள் இன்னமும் காணப்படுகின்றன.
எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களை தவிர்க்கும் நோக்குடன், மலேரியா பரம்பல் உள்ள நாடுகளுக்குச் செல்லும் பொது, மக்கள், யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் உள்ள, மலேரியா தடுப்பு பணிமனையுடன் தொடர்பு கொண்டு, மலேரியா தடுப்பு மருந்துகளை பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
அவர்கள், அந்த நாடுகளில் தங்கியுள்ள காலப்பகுதியில், இத்தடுப்பு மருந்துகளைப் பாவிப்பதன் மூலம், மலேரியா நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
மலேரியா பரம்பல் உள்ள நாடுகளுக்குச் சென்று வந்தவர்கள், நாடு திரும்பியவுடன், மலேரியாவுக்கான குருதிப்பரிசோதனையை எமது வைத்தியசாலைகளில் மேற்கொண்டு, உரிய சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளலாம்.
எனவே, மக்கள் அனைவரும், மலேரியா பரம்பல் அதிகமாகக் காணப்படும் ஆசிய, ஆபிரிக்க மற்றும் தென் அமெரிக்க கண்டங்களுக்குச் செல்லும் போது, பாதுகாப்பு நடவடிக்கைகளைக்கையாண்டு, எமது நாட்டில் மலேரியா நோய் பரவாதிருக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment