செம்மணி பகுதியில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மனித புதைகுழிகளுக்கு மேலதிகமாக அப்பகுதியில் வேறு மனித புதைகுழிகளும் காணப்படுகின்றனவா என்பதனை கண்டறியும் நோக்குடன் ஸ்கான் நடவடிக்கைகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன.
எனினும் ஜி.பி.ஆர். ஸ்கான் (தரையை ஊடுருவும் ராடர்) மூலம், பரந்துபட்ட ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகள் கிடைக்கப்பெறவில்லை.
இந்நிலையில், ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கேனர் கருவியை யாழ் பல்கலைகழகம் ஊடாக பெற்று அதனை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்படி , இன்றைய தினம் குறித்த ஸ்கானரை பயன்படுத்தி ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை,
சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று பார்வையிட்டனர்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்களுடன் யாழ்ப்பாண பிராந்திய அலுவலர்களும், சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்திற்கு சென்று பார்வையிட்டதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய பணிப்பாளர் ரி.கனகராஜ் குறிப்பிட்டார்.
இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சித்துப்பாத்தி வளாகத்தில் வைத்து, குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
அத்துடன், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்று 31 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றன.
Leave a comment